Wednesday, March 04, 2015

On Wednesday, March 04, 2015 by Unknown in ,    
உசிலம்பட்டி அருகே ஆலய ஆக்கிரமிப்பை அகற்ற தடை: 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
உசிலம்பட்டி அருகே கணவாய் பகுதியில் வனத்துறை இடத்தில் உள்ள தேவாலயத்தை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து கிறிஸ்தவர்கள்
செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி - தேனி சாலையில் கணவாய் பகுதியில் வனத்துறை இடத்தில் சிறிய மாதா சிலை வைக்கப்பட்டு, பின்னர், சிறிய ஆலயமாக கட்டி வழிபட்டு
வந்தனர். மேலும், தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி வந்தனர். மலைப்பகுதியில் சிலுவைகளையும் நட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
அருகிலுள்ள கிராம பொதுமக்கள் வழக்குத் தொடர்ந்தனர். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தை அகற்றுமாறு
நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருப்பதால், அதற்கான உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறு அதிகாரிகளை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் 15 நாள்களுக்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உசிலம்பட்டி  வட்டாட்சியருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
விவரம் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கலைந்து சென்றனர்.
உத்தமபாளையம்: இந்நிலையில், தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி ஆர்.சி. சபையைச் சேர்ந்தவர்கள் 
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஏடி.எஸ்.பி. உமா, டி.எஸ்.பி. கண்ணன்,
கோட்டாட்சியர் பார்த்திபன், வட்டாட்சியர் சேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
வழக்குப்பதிவு: இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி தேசிய நெடுஞ்சாலையில்  மறியலில் ஈடுபட்டதாக உத்தமபாளையம் ஆர்.சி தேவாலய போதகர் பால்ராஜ்,
கம்பத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம், சற்குணம், இன்பராஜ் உள்பட 140 பேர் மீது உத்தமபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போடி: இதேபோல், போடி அருகே டி.சிந்தலைச்சேரியிலும் அங்குள்ள தேவாலயத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   
  இதனால் போடி-சின்னமனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தேவாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்
பொறுப்பு வகிக்கும் டவுன் இன்ஸ்பெக்டர் பாலகுரு, அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயராணி மற்றும் போலீஸார் சாலை மறியலில்
ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்

0 comments: