Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by farook press in ,    
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலை அரசு விழா மற்றும் துறை சார்ந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமலும், அழைத்தாலும் தாமதமாக தகவல்கள் கொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டமன்ற உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை மற்றும் உரிமைகளை மறுப்பதாகவே இதை கருதுகிறோம். இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்தும் செயலாகும். 
எனவே எதிர்வரும் காலங்களில் கீழ்கண்ட தீர்மான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும் உரிய முக்கியத்துவத்தோடு சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும், அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லி கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல் நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும், அரசு விழாக்களை ஆளும் கட்சி விழாக்களாக மாற்றி நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இது குறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தும் என்று மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் கூறியுள்ளார்.

0 comments: