Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by farook press in ,    
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் கௌரவத் தலைவராக பேராசிரியர் அருணன், மாநிலத் தலைவராக ச.தமிழ்ச்செல்வன், மாநில பொதுச் செயலாளராக சு.வெங்கடேசன், மாநிலப் பொருளாளராக சு.ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் துணைத் தலைவர்களாக ச.செந்தில்நாதன், என்.நன்மாறன், நந்தலாலா, மதுக்கூர் இராமலிங்கம், ஆர்.நீலா, மயிலை பாலு ஆகிய ஆறு பேரும், மாநில துணைப் பொதுச் செயலாளராக கே.வேலாயுதம், இரா.தெ.முத்து, ஆதவன் தீட்சண்யா, எஸ்.கருணா, அ.குமரேசன், பிரகதீஸ்வரன் ஆகிய ஆறு பேரும் தேர்வு செய்யப்பட்டனர். துணைச் செயலாளர்களாக ஸ்ரீரசா, கி.அன்பரசன், ஸ்ரீதர், சுந்தரவள்ளிலட்சுமிகாந்தன், களப்பிரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இத்துடன் 20 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும், மொத்தம் 132 பேர் மாநிலக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
--------------
தமுஎகச 40வது ஆண்டு நிறைவு விழாவை 
கோலாகலமாக கொண்டாட மாநில மாநாடு முடிவு
திருப்பூர், மார்ச் 22-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவை மதுரை மாநகரில் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடுவது என்று 13வது தமிழ்நாடு மாநில மாநாடு தீர்மானித்துள்ளது.
அதற்கு முன்பாக தமுஎகசவின் 40வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் தீர்மானத்தை மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் முன்மொழிந்தார். 1975ம் ஆண்டு இருண்ட காலத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக உருவான இயக்கம் தமுஎகச. இன்று 40 ஆண்டுகளை நிறைவு செய்து கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது. எனவே தமுஎகசவின் 40ம் ஆண்டு நிறைவு விழாவை மதுரை மாநகரில் கோலாகலமாக, உற்சாகமாக கொண்டாடுவது, மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிச மாண்புகளை உயர்த்திப் பிடித்து முன்னேறுவோம் என்று இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவது என்ற தீர்மானத்தை முன்வைத்தார்.
மதுக்கூர் ராமலிங்கம் வழிமொழிய, பலத்த கரவொலியோடு ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது.
இதையடுத்து பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழக அரசும், மத்திய அரசும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், கௌரவம் காப்பது என்ற பெயரில் நடைபெறும் சாதிக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும், தமிழக உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய மூன்று முக்கிய தீர்மானங்களை முன்வைத்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய ஐந்து மாநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற மாநாட்டு அரங்கில் அனைவரும் கரவொலி எழுப்பி முழு ஆதரவு தெரிவித்தனர்.
நான்கு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் முடிவாக, ஞாயிறன்று சங்கத்தின் கௌரவத் தலைவர் பேராசிரியர் அருணன் மாநாட்டை நிறைவு செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
----------------------

0 comments: