Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by farook press in ,    
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் மற்றும் குறுந்தகடுகள் அறிமுக நிகழ்வை பேராசிரியர் சுந்தரவள்ளி ஒருங்கிணைத்தார். கோவி பாலமுருகுவின் அறிவு தரும் ஏணி, ஸ்ரீரசாவின் துச்சம், ஏகாதசி பாடல்கள், மு.ஈஸ்வரமூர்த்தியின் பேசும் பூக்கள், ரத்தினவேலுவின் வண்ணப்புதுக்குறள் 1100 ஆகிய நூல்களை சுந்தரவள்ளி அறிமுகப்படுத்தினார். 
அதேபோல் சிறுகதை மற்றும் நாவல்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வை மணிமாறன் ஒருங்கிணைத்தார். துறையூர் முருகேசனின் வாண்டுப்பயல் குமார், கோவி பாலமுருகுவின் மோகினி மதகு (சிறுவர் கதைகள்), கழைக்கூத்தாடி, ஜெ.பொன்னுராஜின் பருத்திக்காடு, ந.காவியனின் அன்று இட்ட தீ, வரத. ராஜமாணிக்கத்தின் ஜிங்லி ஆகிய சிறுகதை நூல்களை அவர் அறிமுகப்படுத்தினார். 
கட்டுரைகள் மற்றும் புனைவல்லாத படைப்புகளை வெளியிடும் நிகழ்வை கவிஞர் நா.முத்துநிலவன் ஒருங்கிணைத்தார். முனைவர் த.பரசுராமனின் மொழிகள் அறிந்ததும் அறியாததும், சோலையின் வண்டல் உணவுகள், ஏ.டி.அன்பழகனின் ஒப்புரவாய்...துப்புரவை, ஆவராணி ஆறுமுகத்தின் வெற்றி பெறவே பிறந்தோம், ஆவராணி ஆனந்தனின் வண்ணங்களால் ஆனது வாழ்க்கை, பேரின்பயோகம் எனும் யோகா பாடநூல், விடுதலை ராஜேந்திரனின் மனுதர்ம தந்திரம் ஆகிய நூல்களை அவர் அறிமுகப்படுத்தினார். 
மாநிலத் துணைத் தலைவர் என்.நன்மாறன், நாடகவியலாளர் பிரளயன், திருப்பூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் மிலிட்டரி பொன்னுசாமி, கரிசல் கிருஷ்ணசாமி, பிரேமலதா, 
இத்துடன் ஜிவி, ரமா, வெற்றிச்செல்வி சண்முகம், சோலை இசைக்குயில், ஸ்டாலின் சரவணன் ஆகியோரது குறுந்தகடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
மாநாட்டில் பங்கேற்ற சுமார் 20 வயதுடைய இளைய பிரதிநிதிகள் மேடைக்கு அழைக்கப்பட்டு புதிய படைப்புகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர். 
சனியன்று காலை பிரதிநிதிகள் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் திரைப்படவியலாளர் எம்.சிவக்குமார் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்திப் பேசினார். இடையிடையே கவிதை வாசிப்பு, இசைப் பாடல்கள் என கலாபூர்வமாக மாநாடு நடைபெற்றது.
மாநாடு இன்று நிறைவு (துணைத் தலைப்பு)
நிறைவு நாளான ஞாயிறன்று தொகுப்புரையும், புதிய மாநிலக்குழு, செயற்குழு, நிர்வாகிகள் தேர்வும் நடைபெறுகிறது. மாநில கௌரவத் தலைவர் அருணன் மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றுகிறார். மாலையில் டவுன்ஹால் மைதானத்தில் (பாலுமகேந்திரா அரங்கம்) கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் என்.நன்மாறன், நந்தலாலா, பாரதி கிருஷ்ணகுமார், மதுக்கூர் இராமலிங்கம், கவிஞர் உமா மகேஸ்வரி ஆகியோர் உரையாற்றுகின்றனர். புதுகை பூபாளம் குழுவின் நையாண்டி கச்சேரி, தப்பாட்டம், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், படுகர் இசை, நவீன நாடகம், கிராமியப் பாடல்கள் இடம் பெறுகின்றன.புதிய  படைப்புகளை எழுதிய எழுத்தாளர்கள் மற்றும் வெளியிட்டோர், பெற்றுக் கொண்டோர் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.)

0 comments: