Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    
திருப்பூர் மாநகரில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பையை பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தாளம்பாளையம் கல் குவாரியில் கொட்டுவதற்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அனுமதி வழங்கியுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளில் இருந்தும் நாள்தோறும் சுமார் 400 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, மாநகரைச் சுற்றியுள்ள பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், சுகாதாரச் சீர்கோடு ஏற்படுவதாகக் கூறி, சுற்றுப் பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நெருப்பெரிச்சல் பாறைக் குழியில் குப்பையை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தற்போது, குப்பை கொட்டப்பட்டு வரும் பாறைக் குழிகளும் நிரப்பும் நிலையில் உள்ளன. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தாளம்பாளையம் அருகே, தமிழக அரசால் நடத்தப்பட்டு, கைவிடப்பட்ட கல் குவாரியில் குப்பை கொட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம், ஏற்கெனவே ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
இந்நிலையில், தாளம்பாளையம் கல் குவாரியை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, அதன், அருகில் குடியிருப்புகள் இல்லாததால், மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை இந்த கல் குவாரியில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கினார்.
அதேபோல், நல்லூர் அருகே தனியாருக்குச் சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட, கைவிடப்பட்ட கல் குவாரியையும் ஆட்சியர் பார்வையிட்டார். அதிலும், மாநகராட்சி குப்பையை கொட்டுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர்கள் சிவக்குமார் (திருப்பூர் வடக்கு), கண்ணன் (திருப்பூர் தெற்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments: