Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
தாராபுரம் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
ஆடு மேய்ப்பதில் தகராறு
தாராபுரம் அருகே உள்ள உண்டாரப்பட்டியை சேர்ந்தவர் குமரவேல் (வயது50). இவருடைய மனைவி முருகாத்தாள் (45). இவர்களுக்கு சொந்தமான நிலம் பாலமரத்து தோட்டத்தில் உள்ளது. இங்கு கணவன்–மனைவி இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள். இங்குள்ள தோட்டத்தில் காய்கறி, கரும்பு மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
இவர்களின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் சொந்தமாக ஆட்டுப்பட்டி அமைத்து ஆடு வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று கருப்புசாமியின் ஆடுகள், முருகாத்தாள் தோட்டத்திற்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
இதை பார்த்த முருகாத்தாளும், குமரவேலும் சத்தம் போட்டனர். அப்போது அங்கு வந்த கருப்புசாமிக்கும் முருகாத்தாளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது கருப்புசாமிக்கு ஆதரவாக அவருடைய மனைவி பாப்பாத்தி, மகன் ஆனந்தன், மகள் பானுமதி ஆகியோர் வந்தனர். பின்னர் இருதரப்பினரும் அங்குள்ள பொருட்களை ஒருவர் மீது மற்றொருவர் வீசி தாக்கிக்கொண்டனர். இதில் முருகாத்தாளும், கருப்புசாமியும் காயம் அடைந்தனர்.
உடனே அவர்கள் இருவரும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து முருகாத்தாள் அலங்கியம் போலீசில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரித்து, முருகாத்தாளை தாக்கியதாக கருப்புசாமி, அவருடைய மனைவி பாப்பாத்தி, மகன் ஆனந்தன் மற்றும் மகள் பானுமதி ஆகியோர் மீது கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதே போல் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் முருகாத்தாள் மற்றும் அவருடைய கணவர் குமரவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முருகாத்தாள் கணவரின் தம்பிதான் கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: