Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் நேற்று 61 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.
34 பேர் போட்டியின்றி தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 56 உள்ளாட்சி பதவி உள்பட தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28–ந் தேதி தொடங்கி கடந்த 4–ந் தேதி வரை நடந்தது. வேட்பு மனு பரிசீலனை முடிந்து, மனுக்கள் கடந்த 8–ந் தேதி வரை வாபஸ் வாங்கப்பட்டன. இதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் நகராட்சி 17–வது வார்டு கவுன்சிலர், 4 பேரூராட்சி கவுன்சிலர், குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சி தலைவரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 28 பேரும் என்று மொத்தம் 34 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
22 பதவிகளுக்கு 72 பேர் போட்டி
திருப்பூர் மாநகராட்சியில் 2 வார்டு, பல்லடம் நகராட்சி 6–வது வார்டு, தளி பேரூராட்சி 5–வது வார்டு ஆகியவற்றில் கவுன்சிலர் பதவிக்கும், மடத்துக்குளம் பேரூராட்சி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி ஆகிய 2 பேரூராட்சி தலைவர் பதவி உள்பட மொத்தம் 22 பதவிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த 22 பதவிகளுக்கு 72 பேர் போட்டியிட்டனர்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. நகரப்பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலமும், ஊரக பகுதியில் வாக்குச்சீட்டு மூலமும் ஓட்டுப்பதிவு நடந்தது. நகரப்பகுதியில் 57.47 சதவீதமும், ஊரக பகுதியில் 63.59 சதவீதமும் என்று மாவட்டம் முழுவதும் 60.98 சதவீதம் பேர் வாக்களித்தனர். குறைந்த பட்சமாக திருப்பூர் மாநகராட்சி 22–வது வார்டில் 52.51 சதவீதமும், அதிகபட்சமாக குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி ஊராட்சி 3–வது வார்டில் 90.63 சதவீதமும் வாக்குப்பதிவானது.
பலத்த பாதுகாப்பு
பதற்றமான வாக்குச்சாவடிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் ஓட்டுப்பதிவு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. தேர்தல் பணிகளை கண்காணிக்க உள்ளூர் பார்வையாளர்களாக 10 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஓட்டுப்பதிவை கண்காணித்தனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு ஊரக பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் 5 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 15 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல் மாநகர பகுதியில் 2 வார்டுகளுக்கு 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பதிவான வாக்குகளை எண்ண 20 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஓட்டுப்பெட்டிகளும் சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன. வருகிற 22–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

0 comments: