Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    
குட்டப்பாளையம் பகுதியில் வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் முத்தூர், நத்தக்காடையூர், குட்டப்பாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாய சாகுபடி பணிகள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்து பலன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் எண்ணெய்வித்து பயிர் சாகுபடிக்கு முறைத்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் எள், மக்காசோளம், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் குட்டப்பாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கீழ்பவானி பாசன விவசாயிகள் தற்போது எண்ணெய்வித்து பயிர் சாகுபடிக்கு அடுத்த படியாக குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக பலன் தரும் வெண்டை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி சுற்றுவட்டார விவசாயிகள் தங்களது வயல்களில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவு வரை வெண்டை சாகுபடி செய்துள்ளனர்.
இதன்படி 1 ஏக்கர் வெண்டை சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பார்கட்டுதல், அடி உரமிடுதல், விதை ஊன்றுதல், களைஎடுத்தல், உரநிர்வாகம், பயிர் பாதுகாப்பு பேணுதல் என ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த வெண்டை செடிகளில் தற்போது மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து அயல் மகரந்த சேர்க்கை மூலம் வெண்டை பிஞ்சுகள் உருவாகி வெண்டை காய்களாக காய்த்துள்ளன.
வெண்டை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்துள்ள வெண்டை காய்களை அறுவடை செய்து முத்தூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில், காங்கயம், அரச்சலூர், சிவகிரி, கந்தசாமிபாளையம், ஆகிய பகுதிகளில் செயல்படும் வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி கடைகளுக்கு நேரில் கொண்டு சென்று விற்று பலன் அடைந்து வருகின்றனர். இப்பகுதிகளில் குறுகிய காலத்தில் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் வெண்டை காய்கள் சாகுபடி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments: