Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூர், பல்லடம், அவினாசி தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய 9 தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய 10 இடங்களில் பொது இ–சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 தாலுகா அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் இந்த சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 24–ந் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தில் இந்த சேவை மையங்கள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆகியவற்றை இந்த மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண நிதி உதவிதிட்டம் தொடர்பான அனைத்து கோரிக்கை மனுக்களும் இங்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அமைச்சர் ஆய்வு
மேலும் மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் பொது சேவை மையம் மூலம் வழங்கப்படுகிறது. அதுபோல் மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் ‘பான்கார்டு’ பெறவும், ஆதார் அட்டை பெறுவதற்கு ஒப்புகை சீட்டு இருந்தால் அதை பயன்படுத்தி ஆதார் அட்டை நகல் எடுத்துக்கொள்வதற்கும் இங்கு விண்ணப்பிக்கலாம். இதுதவிர தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்துகொள்ளவும், பாஸ்போர்ட் பெறுவதற்கும், அதுதொடர்பான காவல்துறையின் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதற்கும், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) தவணை தொகை செலுத்தவும் இந்த பொது இ–சேவை மையத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். திருப்பூர் வடக்கு, பல்லடம், அவினாசி ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையத்துக்கு சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சான்றிதழ்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மேயர் விசாலாட்சி, மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், கருப்பசாமி, துணைமேயர் குணசேகரன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், அவினாசி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள், பல்லடம் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவாசலம், உகாயனூர் ஊராட்சி தலைவர் யு.எஸ்.பழனிசாமி, பல்லடம் நகர அ.தி.மு.க. செயலாளர் ரத்தினசாமி, ஒன்றிய துணை செயலாளர் சித்துராஜ், தாசில்தார்கள் சிவக்குமார், ரமேஷ், அம்சவேணி, அரசு கேபிள் டி.வி. தாசில்தார் முருகதாஸ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: