Monday, March 23, 2015

On Monday, March 23, 2015 by Unknown in ,    
திருப்பூர் அருகே பள்ளி மாணவரைக் கடத்தி ரூ. 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக திருப்பூர் ஊரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (32). இவரது மனைவி சல்மா ஷாரீஃப். இவர்களது மகன் முகமதுஇம்ரான் (10). அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், சனிக்கிழமை மாலை தனது நண்பர் இசாக் (15), அவரது நண்பர்கள் ஷாருகான், முஸ்தாக் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியிலுள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்கச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், தாங்களும் குளிக்கத்தான் செல்கிறோம் என்று கூறி, முகமது இம்ரான், இசாக் ஆகியோரை தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனராம்.
தொடர்ந்து, இசாக்கை பி.ஏ.பி. வாய்க்கால் அருகே இறக்கி விட்டு,விட்டு முகமது இம்ரானை மிரட்டி கூலிப்பாளையம் நான்கு சாலை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து முகமது இம்ரானை மிரட்டி அடித்ததாகத் தெரிகிறது.
மேலும், முகமதுஇம்ரான் பெற்றோரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு ரூ. 10 ஆயிரம் கொடுத்தால் தங்கள் மகனை விடுவதாகக் கூறினார்களாம்.
இதனால் அச்சமடைந்த முகமதுஇம்ரானின் பெற்றோர், ரூ. 5 ஆயிரம் தருவதாக உறுதியளித்ததையடுத்து, பணத்துடன் கூலிப்பாளையம் நான்கு சாலைக்கு வருமாறு அந்த நபர்கள் தெரிவித்தனராம். தொடர்ந்து, பணத்தை எடுத்துக்கொண்டு சல்மாஷாரீஃப், கூலிப்பாளையம் நான்கு சாலைக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு மறைந்து நின்ற இருநபர்கள் ரூ. 5 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு முகமதுஇம்ரானை விடுவித்து விட்டதாக தெரிகிறது.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து முகமதுஇம்ரானின் பெற்றோர் திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கடத்தி பணம் பறித்த நபர்களை தேடி வருகின்றனர்

0 comments: