Wednesday, April 08, 2015

On Wednesday, April 08, 2015 by Unknown in ,    

உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இதற்கு பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார், டீசல் என்ஜின்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை நூற்றுக்கணக்கான கரையோர கிராமங் களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியதில் இருந்தே அமராவதி அணையின் நீர் இருப்பு அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
இந்நிலையில், அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மற்றும் டீசல் என்ஜின்கள் மூலமாக ஆங்காங்கு தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவின்பேரில், உடுமலை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, மின்சாரம், காவல் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை திடீர் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், கொழுமம், கொமரலிங்கம், ருத்ராபாபாளையம் ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தண்ணீர் உறிஞ்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட 8 மின் மோட்டார்கள், 9 டீசல் என்ஜின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 8 விவசாயிகளுக்கு மின் இணைப்பையும் அதிகாரிகள் உடனடியாக துண்டித்தனர்.
தண்ணீர் திருட்டில் ஈடுபட்டதாக 17 விவசாயிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: