Monday, April 20, 2015

On Monday, April 20, 2015 by Unknown in ,    
வாகன விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தை தாராபுரத்தில் நீதிமன்ற ஊழியர்கள்  சனிக்கிழமை ஜப்தி செய்தனர்.
தாராபுரம் அருகே சந்திராபுரத்தை சேர்ந்தவர் ரதேஷ் (26). தாராபுரம், பூளவாடி சாலையிலுள்ள ஹாலோபிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 22.3.2013 அன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சந்திராபுரத்தை நோக்கி சென்று கொண்டிருபோது, மதுரையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபெருமாள், தனது தீர்ப்பில், ரதேஷ் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு 11.3.2014 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில், நஷ்ட ஈடு தொகை வழங்கப்படாததால் ரதேஷின் மனைவி கமலா நிறைவேற்றுதல் மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி சரவணபெருமாள், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள் கோவையிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தை சனிக்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

0 comments: