Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
உடுமலையை அடுத்துள்ள கொங்கல் நகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக குடிமங்கலம் ஒன்றிய பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்துப் பேசியது:
கொங்கல் நகரம் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக பல்வேறு முறை கேடுகள் நடைபெற்றுள்ளன. பயிர், நகைக் கடன்கள் வழங்குவதில் முன்னுக்குப் பின் முரணாக கணக்குகள் எழுதப்பட்டுள்ளன. மேலும், இங்கு அடமானம் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள் வேறு கூட்டுறவுச் சங்கத்தில் மறு அடமானம் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த சில வருடங்களில் மட்டும் ரூ. 10 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுச் சங்க உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பணத்தை மீட்டுத் தரவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்தவும் தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்றார்.  
ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் விஜயராகவன், நிர்வாகிகள் வடுகநாதன், செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments: