Tuesday, April 07, 2015

On Tuesday, April 07, 2015 by Unknown in ,    
நெல் மூட்டைகளில் கலப்படம்: மதுரை குடோன்களில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் அருகில் செங்கல்சூளையில் ராமநாதபுரம் அரசு மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் செங்கல் மற்றும் சவடுமண் கலப்படம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக லாரி டிரைவர்கள் ராஜா, சிங்கராஜா, நெல் வியாபாரியின் நண்பர் அருண்ஜான் ஆகியோரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
நெல் வியாபாரிகள் சத்தியமூர்த்தி, ஜேம்ஸ், செங்கல் சூளை அதிபர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் கப்பலூர், ஆஸ்டின்பட்டி பகுதிகளில் உள்ள திறந்த வெளி குடோன்களில் நேற்று 4–வது நாளாக தரக்கட்டுப்பாட்டு மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் லஞ்ச ஒழிப்பு அதிகாரி சந்திரமோகனும் தனியாக ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ராமநாதபுரத்தில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளில் கலப்படம் இருந்ததால் அந்த மாவட்டத்தில் இருந்து வந்த நெல் மூட்டைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. சந்தேகிக்கப்படும் மூட்டைகள் தனியாக அடையாளமிடப்பட்டுள்ளது. ஆய்வில் சேகரிக்கப்பட்ட நெல் மாதிரிகள், தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, பாலகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய சங்க செயலாளர்கள் செல்லக்கண்ணு, தேவராஜ், வக்கீல் பழனிச்சாமி ஆகியோர் கப்பலூர் மற்றும் ஆஸ்டின்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்த நெல் மூட்டைகளில் பெரும்பாலானவை பதர் மூட்டைகளாக இருந்ததை கண்டறிந்தனர். சில நெல் மூட்டைகளில் இருந்து கல் மற்றும் மணல்களை சேகரித்த எம்.எல்.ஏ.க்கள் அவற்றை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் காட்டி புகார் செய்தனர்.
இது குறித்து பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–
2 கிட்டங்கிகளில் ஆய்வு செய்ததில் பல நெல் மூட்டைகளில் கல், மணல் இருந்தது. சில மூட்டைகளில் நெல்லே இல்லாமல் பதர் மட்டுமே இருந்தது. இந்த கலப்பட முறைகேடு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
நெல் கலப்பட பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் பேசினோம். முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் கலப்படம் நடந்துள்ளது.
பால் கொள்முதலில் கலப்படம் இருந்ததால் பால் வளத்துறை அமைச்சர் பதவி நீக்கப்பட்டார். அதேபோல நெல் கலப்பட விசாரணை முடியும் வரை உணவுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த முறைகேடுக்கு எதிராக வருகிற 11–ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். லாரி டிரைவர் உள்பட சாதாரண நபர்களே இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

0 comments: