Sunday, May 03, 2015
"கடமையை உணர்ந்துதான் செயல்படுகிறீர்களா?" என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள திறந்த மடலில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், "தமிழகத்தைச் சூழ்ந்துள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரவே இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.
நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்களும், சிறிதும் கவலைப்படாமலும் அறியாமலும் இருக்கும் தமிழகத்தின் யதார்த்த நிலைகள் பற்றி தான் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொழில் தொடங்க ஆர்வத்துடன் நம் மாநிலத்தை நோக்கி அணி அணியாக வந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது தமிழகம் ஆற்றல் நிறைந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும், தொழில்நேயம் கொண்டதாகவும் திகழ்ந்தது.
ஆனால், இன்றைக்கோ தமிழகம் மிகுந்த நோய்வாய்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) கவலைக்கிடமாகக் கிடத்தப்பட்டு இருக்கிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்திவைப்பு நியாயம்தானா?
நாட்டிலேயே அதிகமான தொழில் முதலீடுகளைப் பெறும் முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் இருந்த தமிழகம் இப்போது, விட்டால் போதும் என்று கம்பெனிகள் ஓடி ஒளியும் முதல் மூன்று மாநிலங்களுள் ஒன்றாகி விட்டது. அரசின் ஆதரவு இல்லாததால் ஃபாக்ஸ்கான், நோக்கியா போன்ற கம்பெனிகள் கதவை மூடிவிட்டு நம் மாநிலத்தை விட்டே வெளியேறிவிட்டன. ஹூண்டாய், ஃபோர்டு, செயின்ட் கோபைன் போன்ற கம்பெனிகள் தங்களது அடுத்த கட்ட விரிவாக்கத்தை மற்ற மாநிலங்களுக்கு மாற்றிக் கொண்டு செல்லவே விரும்புகின்றன. சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் கடந்த நான்கு வருடங்களாகச் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன.
தொழிலதிபர்களைச் சந்திக்க "சரியான" முதலமைச்சர் இல்லாததால் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட "உலக முதலீட்டாளர்கள் மாநாடு" இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் விளம்பரங்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து 100 கோடி ரூபாயை வீணடித்துள்ளீர்கள். இந்த மாநாட்டின் மூலம் 76,000 கோடி ரூபாய் முதலீடு வரப்போகிறது என்று கூறினீர்கள்.
70 சதவீத பட்டதாரிகள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் 76,000 கோடி ரூபாய் முதலீடு மூலம் எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியும் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? உங்கள் அரசுக்கு இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி ஏதாவது அக்கறை உண்டா? லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால கனவுகளை அழித்துக் கொண்டிருக்கிறீர்களே, இது நியாயமா?
அறிவிப்புகள் மட்டும்தானா?
உங்கள் அரசால் எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, அவையெல்லாம் வெற்று அறிவிப்புகளாக காகிதங்களில் முடங்கி உள்ளனவே தவிர, அதற்கு செயல் வடிவம் தருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஏதும், இதுவரை உங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. உங்கள் அரசாங்கத்திற்கு, மாநில முன்னேற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வையும் இல்லை. அதனால் அரசு நிர்வாகமே இன்றைக்கு ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.
கடந்த நான்கு வருடங்களில் மக்களைப் பெரிதும் அச்சுறுத்தும் அளவிற்கு குற்றங்கள் பெருகி விட்டன. குறிப்பாகக் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் அதிகமாகி விட்டன. மின் பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் கைமீறிச் சென்று விட்டது.
ஊழல் மலிந்துவிட்டது:
ஊழல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. கோடை வெயிலில் அவதிப்படும் மக்களின் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படும் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான குளிர்சாதன மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முடிவடைந்தும் திறந்து வைக்க யாருக்காக காத்திருக்கிறீர்கள்? ஒரு திறப்பு விழாவிற்குக் கூட தலைமை தாங்க முடியாத ஒரு முதல்வராக இருக்கிறீர்களே.
கண் அசைவுக்காக காத்திருப்பதா?
நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் அணை கட்ட கர்நாடக மாநிலம் முயற்சி செய்வதை வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் தம் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போயஸ் கார்டனின் கண் அசைவின்றி யாருடனும் பேச முடியாது என்பதால், போராடும் ஊழியர்களுடன் நீங்கள் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் மவுனம் சாதிக்கிறீர்கள். மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும், ஜனநாயகத்தின் தூணாகவும் விளங்கும் சட்டமன்றத்தை உங்கள் தலைவிக்குத் துதி பாடும் மன்றமாக மாற்றிக் காட்டிவிட்டீர்கள். உங்கள் அமைச்சர்களின் வசூல் வெறி மிரட்டல் தாங்க முடியாமல் அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். முதலமைச்சர் திரு. ஒ.பன்னீர் செல்வம் அவர்களே! இது தான் இன்றைக்கு உங்கள் ஆட்சியில், தமிழகத்தின் அவல நிலை!
வேண்டுதல்கள் அவசியமா?
அரசை நிர்வாகம் செய்ய வேண்டிய நீங்களும் உங்கள் அமைச்சர்களும் தினந்தோறும் பூஜைகள் செய்து, பால் குடம் தூக்கி, தீ மிதித்து கொண்டிருக்கிறீர்கள். இது என்ன தமிழக மக்கள் நலன் கருதியா செய்கிறீர்கள்? ஊழல் வழக்கிலிருந்து உங்கள் தலைவி விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தானே செய்கிறீர்கள்? நீங்கள் உங்கள் வேண்டுதலுக்காகச் செலவு செய்யும் முழு நேரத்தில் ஒரு சிறிய பங்கையாவது அரசு நிர்வாகத்தை நடத்துவற்குச் செலவழிக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
உங்கள் அரசு நிர்வாகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரேயொரு நிறுவனம் டாஸ்மாக் தான். அது தான் இன்றைக்கு உங்கள் அரசின் மொத்த வருவாயில் 30 சதவீதத்தைக் ஈட்டுகிறது. மது அருந்துவதில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முதன்மை மாநிலமாக அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் உருவாகி இருக்கிறது.
டாஸ்மாக்..ஒரே சாதனை!
இது தான் உங்களுக்கும், அ.தி.மு.க அரசுக்கும் பெருமை தேடித் தருகிறதா? உங்கள் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் இதுவே உங்கள் ஒரே சாதனை என்று விளம்பரம் கொடுக்கப் போகிறீர்களா? மதுவை மட்டுமே நம்பியுள்ள ஒரே மாநிலமாக தமிழகத்தை ஆக்குவது தான், எங்கள் ஒற்றைக் குறிக்கோள் என்று இந்த அரசாங்கம் நடைபெற்று கொண்டிருக்கிறதா?
பொறுப்புணர்வே இல்லையா?
உங்கள் தலைவி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதற்காக நீங்கள் தமிழக மக்களைத் தண்டிப்பது சரியா? மாநிலத்தின் நலனில் அக்கறை காட்டாமல் உங்கள் தலைவியின் நலனில் மட்டுமே நீங்கள் அக்கறை காட்டுவதால் ஏழரைக் கோடி தமிழ் மக்களின் எதிர்காலமும், வாழ்வாதாரமும் இன்றைக்கு கேள்விக்குறியாகி நிற்கிறது.
உங்களுக்கும், உங்களின் கீழ் உள்ள அமைச்சர்களுக்கும் பொறுப்புணர்வு எப்பொழுது வரும்? தங்களுடைய குடும்பத்தின் எதிர்காலம் நிம்மதியானதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் தானே மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? அப்படி நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை நாம் நாசம் செய்துவிட்டோமே, அவர்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகிறோமே என்ற வருத்தமும், வெட்கமும் உங்களுக்குச் சிறிதும் இல்லையா?
உங்கள் கடமை என்ன தெரியுமா?
நான் தமிழக அரசின் இணையதளத்தைப் பார்த்தேன் (http://www.tn.gov.in/government/keycontact/18358) ஒ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் என்று குறிப்பிட்டிருந்தது.
நீங்கள் இன்று வரை அப்படி நடந்து கொண்டதாக தெரியவில்லை. ஆட்சியின் கடைசி வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள உங்களது நிர்வாகம் இனிமேலாவது விழித்துக் கொள்ளுமா? மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இப்போதாவது முயற்சி செய்வீர்களா?
தமிழ்நாட்டு மக்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறை காட்டுவீர்களா? இந்த கடிதத்தை நிறைவு செய்யும் முன்பு இறுதியாக ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன். உங்களிடம் மட்டுமல்ல, அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்க விரும்புகிறேன். "உங்களது முதல் கடமை தமிழக மக்கள் நலனுக்காகப் பாடுபடுவதா? அல்லது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ள உங்கள் கட்சி தலைவியின் நலனுக்காக மட்டும் பாடுபடுவதா?"
இந்த கேள்விக்கு மனச்சாட்சியை தொட்டு பதில் அளிக்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?" இவ்வாறு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
-
திருச்சி மார்ச் 24 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ...
0 comments:
Post a Comment