Tuesday, June 09, 2015

On Tuesday, June 09, 2015 by Unknown in ,    
மதுரையில் அதிகநேரம் பணியில் ஈடுபட கிளை மேலாளர் வற்புறுத்துவதாக புகார் தெரிவித்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு  முதல் அரசுப் பேருந்து ரிசர்வ் பணி ஓட்டுநராக பணியில் உள்ளார். மாநகர் அரசு பேருந்துகளில் ஓட்டுநராக உள்ள செந்தில்குமார், ஞாயிற்றுக்கிழமை  பகலில் பணிக்கு வந்து இரவு 9 மணிக்கு பணியை முடித்துள்ளார்.
பணியை அவர் முடித்த நிலையில், வெளியூர் பேருந்துக்கு ஓட்டுநராகச் சென்றுவர மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டெப்போ கிளை மேலாளர் கூறியுள்ளார். வெளியூருக்குச் செல்ல முடியாத நிலையிலிருப்பதாக கூறிய செந்தில்குமார், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மீண்டும் மாநகர் பேருந்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் நிற்கும் பகுதியில் கிளை மேலாளருக்கும், ஓட்டுநர் செந்தில்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், செந்தில்குமார் தான் வைத்திருந்த கேனிலிருந்த பெட்ரோலை தலையில் ஊற்றிக்கொண்டு கிளை மேலாளரைக் கட்டிப்பிடித்து தற்கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த மற்ற பேருந்து ஓட்டுநர்கள் செந்தில்குமாரைத் தடுத்து, சமரசம் செய்தனர். பின் செந்தில்குமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டெப்போ கிளை மேலாளரைக் கண்டித்து    திங்கள்கிழமை காலையில் அரசுப் போக்குவரத்துக் கழக புதூர் பணிமனை முன்பு பேருந்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் (சிஐடியூ) போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மதுரைக் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக துணைமேலாளர் (கூட்டாண்மை) துரைராஜ் அங்கு வந்து, ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக சிஐடியூ தலைவர் ஜி.ராஜேந்திரன் கூறுகையில், ஓட்டுநர்களுக்கு அதிக நேரம் பணிகளை ஒதுக்குவதால் மன உளைச்சளுக்கு ஆளாகின்றனர். இச்செயலை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும், என்றார்

0 comments: