Wednesday, September 30, 2015

On Wednesday, September 30, 2015 by Unknown in ,    
தீபாவளி விற்பனைக்காக சீனப் பட்டாசுகளைக் கொண்ட 1,000 சரக்குப் பெட்டகங்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டுள்ளன. எனவே, சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டாசுத் தொழில் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அந்த இயக்கத்தின் நிறுவனர் தலைவர் நா.ராசா கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரின் அடையாளம் பட்டாசுத் தொழில். அண்மைக்காலமாக, இந்தத் தொழில் நசிந்து வருகிறது. பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வாரத்தில் மூன்று நாள்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். நிகழாண்டில், கடந்த மூன்று மாதம் இதே நிலை நீடித்தது. வரும் தீபாவளி பண்டிகைக்காக, பல ஆயிரம் கோடியில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை குறைந்தளவிலேயே பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
 குறிப்பாக, வடமாநிலங்களிலிருந்து செய்யப்படும் பட்டாசு கொள்முதல் சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சீனப் பட்டாசுகள்.
 தடையின்றி சீனப் பட்டாசு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், இங்கு பட்டாசுத் தொழில் முற்றிலும் நசிந்து போகும் சூழல் உருவாகும்.
  கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சென்னை, மும்பை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில்  எந்தவிதத் தடையுமின்றி சீனப் பட்டாசு அடங்கிய கண்டெய்னர்கள் நுழைகின்றன. இதுவரை, சீனப் பட்டாசுகளைக் கொண்டு வரும் நபர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது.
 தீபாவளி பண்டிகைக்காக, சுமார் 1,000-க்கும் மேற்பட்ட சீனப் பட்டாசு அடங்கிய கண்டெய்னர்கள் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது. இவை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படவுள்ளன. துறைமுகத்துக்குள் நுழையும் அனைத்து கண்டெய்னர்களையும் ஸ்கேனர் கருவி கொண்டு சோதனை செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். ஆனால், போதிய ஸ்கேனர் கருவிகள் இல்லாததால், தடையின்றி சீனப் பட்டாசுகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த ரகப் பட்டாசுகள் பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.
ஆகையால் இவற்றின் விற்பனையை, இறக்குமதியை முற்றிலும் கட்டுப்படுத்தி, உள்நாட்டு பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில், தமிழக அரசும் இவற்றின் விற்பனையை மாநிலத்தில் கட்டுப்படுத்தி, மாநிலம் முழுவதும் தாற்காலிக பட்டாசு உரிமம் வழங்கும் உத்தரவை முதல்வர் அறிவிக்க வேண்டும் என்றார் நா.ராசா

0 comments: