Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in ,    
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்தி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்கில் மேலதிகாரிகளின் நிர்பந்தத்தின் காரணமாகவே தற்கொலை நிகழ்ந்திருப்பதற்கான காரணம் என வெளிப்படையாக தெரிகிறது.
அவர் விசாரித்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி யுவராஜ் இது வரை கைது செய்யப்பட வில்லை. உள்ளூரில் இருக்கும் குற்றவாளியை கைது செய்யவிடாமல் தடுப்பது எந்த சக்தி என்பது தெரியவில்லை.
குற்றவாளி பலம் வாய்ந்த அரசியல் பிண்ணனியில் இருக்கலாம் என்பதும் கைது செய்யப்படாததற்கான காரணமாக இருக்கலாம். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்வது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. சி.பி.ஐ விசாரணை வேண்டும்.
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. முத்துகுமார சாமியை தொடர்ந்து தற்போது பல லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்து வரும் சகாயத்திற்கும் காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அங்கு நரபலி விசாரணையில் எலும்பு கூடுகள் கிடைத்திருப்பது அச்சத்தை வர வழைத்துள்ளது. அரசு உடன்பட்டு உண்மைகளை வெளி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டமும் மக்களை முழு அளவில் சென்றடையாத நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.
பட்டாசு தொழிலை நசுக்கும் வகையில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும். இதனால் சிவகாசியில் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீன பட்டாசுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments: