Wednesday, September 30, 2015

On Wednesday, September 30, 2015 by Unknown in ,    

First Published : 29 September 2015 07:06 AM IST
மழைக்காலங்களில் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொதுமக்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் தொற்று நோய் தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்து பேசுகையில், இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. அதனால் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு நல்ல தண்ணீர் மூலமே பரவுகிறது. எனவே வீட்டில் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் சேமித்து  வைக்கும் பாத்திரங்களுக்குள் கொசுக்கள் புகாமல் மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புற பகுதியில் தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள், கொட்டாங்குச்சிகள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்க முடியும்.
     ஒவ்வொரு ஊராட்சியிலும் துப்புரவு பணியாளர்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று வைரஸ் கொசுக்கள் பரவும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை ஆய்வு செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் எடுத்துக் கூற வேண்டும்.
     காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவர்களின் அனுமதியில்லாமல் தானாகவே மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது. எனவே பொதுமக்கள் வைரஸ் காய்ச்சல் குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை, தேவையான மருந்து, மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
     இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், திட்ட இயக்குநர் சுரேஷ், மருத்துவத்துறை இணை இயக்குநர் தங்கசாமி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் கலு.சிவலிங்கம்(சிவகாசி), பழனிசாமி(விருதுநகர்), பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், மருந்து கட்டுப்பாடு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

0 comments: