Friday, November 20, 2015

On Friday, November 20, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் மழைபெய்ய தொடங்கியது. கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர் பகுதியில் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. 

கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்தது. எனவே கிராமமக்கள் ஓடையின் அருகில் மணல் மூடைகளை அடுக்கி வைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். கடம்பூர் தங்கம்மாள்புரத்தில் பலத்த மழையால் 18 வீடுகள் இடிந்தன. இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் கயத்தாறு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் தியாகராஜபாகவதர் தெருவை சேர்ந்தவர் கணேசன், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த அன்னத்தாய், கன்னியம்மாள் கோவில் தெருவை சேர்ந்த முருகன் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தது.

முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளத்தாய் என்பவரின் கடையும் இடிந்து விழுந்தது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர், வருவாய் அதிகாரி வனஜா, இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று இடிந்த வீடுகளை பார்வையிட்டனர். தொடர் மழை காராணமாக கயத்தாறு பகுதியில் உள்ள ஓடைகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துபட்டி கிராமத்தில் ரூ.1 கோடியே 8 லட்சம் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அதன் அருகில் சர்வீஸ் ரோட்டில் ராட்சத குழாய்கள் மூலம் தற்காலிக தரைப்பாலம் அமைக்கபட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து செல்லப்பட்டது. இதனால் கோவில்பட்டி, ஊத்துபட்டி, குருமலை இடையே வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

2–வது நாளாக இன்றும் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைக்கும்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டியில் இருந்து நாலாட்டின்புதூர், குமாரபுரம் ரெயில்வே கேட் வழியாக குருமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. செய்துங்கநல்லூர் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள அய்யனார்குளம் பட்டி குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. தொடர்மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 114 வீடுகள் இடிந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில்  இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு விபரம் மில்லிமீட்டரில் வருமாறு: கயத்தாறு - 67, சூரங்குடி - 33, வைப்பாஸ - 33, ஸ்ரீவைகுண்டம் – 13.6, காடல்குடி - 13, தூத்துக்குடி – 0.3, ஒட்டப்பிடாரம் - 3, சாத்தான்குளம் - 4, கழுகுமலை - 4, எட்டயபுரம் – 1. மாவட்டத்தில் மொத்தம் 183.4மிமீ மழை பதிவாகி உள்ளது. 

0 comments: