Wednesday, February 10, 2016

On Wednesday, February 10, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 12,13,14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் 162 கிமீ நீண்ட கடற்கரையைக் கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பல்வேறு கடற்கரைகள் இயற்கை எழில் கொஞ்சும், சிறந்த கடற்கரைகளாக திகழ்கிறது. இதில் அழகான கடற்கரை கிராமமான மணப்பாடு, கிழக்கு கடற்கரை சாலையில் திருச்செந்தூரிலிருந்து 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 

மணப்பாடு கடற்கரையின் சிறப்பு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையாக உருவான சிறு குன்றுகளின் அணிவகுப்பும் கடலுக்குள் நீண்டுகொண்டிருக்கும் அதன் முனையுமாகும். பழங்காலந்தொட்டே, மணப்பாடு கிராமம் வரலாற்று சிறப்புமிக்கதாக விளங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பழமையான அழகிய கட்டிடங்களையும் ஆலயங்களையும் கொண்ட இந்த கிராம கடற்கரையை காண்போரின் கண்களுக்கு விருந்து படைக்கக் கூடியவை.

தமிழ்நாட்டின் நீண்ட கடலோரம் மிக அழகான கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது. சில குறிப்பிட்ட கடற்கரைகளில் காணப்படும் இயற்கையான அமைப்புகள், பாய்ப்படகு ஓட்டம் (Sailing), அலைச்சறுக்கு ஓட்டம் (Surfing), காத்தாடி இணைந்த அலைச்சறுக்கு ஓட்டம் (Kite Boarding), குறும்படகு ஓட்டம் (Kayaking) மற்றும் நிற்படி-துழாவல் ஓட்டம் (Stand Up Paddle) போன்ற கடல் சாகச விளையாட்டுக்களுக்கு மிகவும் ஏற்றது. நாட்டிலேயே முதல் முறையாக மணப்பாட்டில்தான் கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் 09, 10 மற்றும் 11 தேதிகளில் இத்தகைய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மணப்பாடு கடற்கரை கிராமத்தில் வருகின்ற 2016 பிப்ரவரி மாதம் 12, 13 மற்றும் 14 தேதிகளில் "மணப்பாடு க்ளாசிக் - பாய்படகு மற்றும் அலைச்சறுக்கு விளையாட்டுத் திருவிழா 2016” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாம் ஆண்டு தொடர் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாய்ப்படகு ஓட்டம், அலைச்சறுக்கு ஓட்டம், காத்தாடி இணைந்த அலைச்சறுக்கு ஓட்டம், குறும்படகு ஓட்டம், காற்று சறுக்கு ஓட்டம், மற்றும் நிற்படி-துழாவல் ஓட்டம் (Stand Up Paddle) போன்ற 6 முக்கிய கடல் சாகச விளையாட்டுக்கள் ஒரே இடத்தில் போட்டிகளாக மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

‘மணப்பாடு க்ளாசிக் - 2016 நிகழ்ச்சி, ‘Manapad Surf Resort” என்ற கடல் சாகச விளையாட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுAqua outback, Cove long Surf Point, Quest Expeditious, Kite boarding Federation of India மற்றும் Surfing Federation of India போன்ற சாகச விளையாட்டு நிறுவனங்கள் இணைந்த நிபுணர் குழுவால் நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் முதன்மையான ஆதரவோடும் மற்ற பெருநிறுவனங்களின் பங்களிப்புடனும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையரின் வழிகாட்டுதல்படி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், இந்த மொகா நிகழ்வுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறது.

போட்டிகள் மட்டுமன்றி, பார்வையாளர்கள் பங்கு பெறுவதற்கென யோகப்பயிற்கி, சிறப்பு உடல் தகுதிப் பயிற்சி, அலைச்சறுக்கு பயிற்சி, குறும்படகு பயிற்சி மற்றும் பலகைச் சறுக்கு பயிற்சி போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை வேளைகளில் மூன்று நாட்களுக்கும் கலைநிகழ்ச்சிகளும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உள்ளுர் உணவு வகைகளின் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சுற்றுலாத்துறை, இந்த நிகழ்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கடற்சாகச விளையாட்டுக்களை ஊக்குவித்து வருகிறது. இம்முயற்சி, உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் தமிழகத்திற்கு குறிப்பாக மணப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவக் கூடியது. என மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.

0 comments: