Monday, February 15, 2016

On Monday, February 15, 2016 by Unknown in , ,    
தேசிய அளவிலான கடல் சாகச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் வழங்கினார்.

தமிழ்நாடு சுற்றுலா துறை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மணப்பாடு கிளாசிக் விளையாட்டு குழு ஆகியன இணைந்து தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரை கிராமத்தில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகளை நடத்தியது. கடந்த 12-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த 120 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இறுதி போட்டி நேற்று நடந்தது.
 
ஆண்கள், பெண்களுக்கான குறும்படகு போட்டி, காற்றாடி இணைந்த அலைசறுக்கு போட்டி, பாய்மர அலைசறுக்கு போட்டி, நின்றபடி துளாவல் போட்டி, நீச்சல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. பெண்களுக்கான குறும்படகு போட்டியில் விளாசினி முதலிடத்தையும், தந்தி 2-வது இடத்தையும், சிஞ்சனா கவுடா 3-ம் இடத்தையும், ஆண்களுக்கான குறும்படகு போட்டியில் சென்னையை சேர்ந்த சேகர் முதலிடத்தையும், ராமேசுவரம் ஜெரால்டின் 2-வது இடத்தையும், சென்னை ராஜசேகர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
 
நின்றபடி துளாவல் போட்டியில் பெண்கள் பிரிவில் தந்தி முதலிடத்தையும், சிஞ்சனா கவுடா 2-ம் இடத்தையும், விளாசினி 3-வது இடத்தையும் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் சென்னை சேகர் முதலிடத்தையும், விக்கி 2-வது இடத்தையும், மூர்த்தி மேகவர்ணன் 3-வது இடத்தையும் பிடித்தனர். ஆண்களுக்கான காற்றாலை அலை சறுக்கு போட்டியில் கோவிந்த் முதலிடத்தையும், அர்ஜூன் மோத்தா 2-ம் இடத்தையும், முகம்மது ஆசிக் 3-ம் இடத்தையும், ஆண்களுக்கான பாய்மரகு போட்டியில் ஆதிஷ், முஸ்தபா, உசேன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். 

பெண்களுக்கான போட்டியில் சுஷ்மிதா, நிவேதிகா, லெபன்சி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். உள்ளூர் வீரர்களுக்கான கயிற்றில் நின்று ஆடுதல் போட்டியில் பெவிசன், ஜெபாஸ்டின், எபினேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், அலை சறுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர் அருண் மிராண்டா வரவேற்றார். உடன்குடி யூனியன் துணை தலைவர் கே.வி.ராஜதுரை, மணப்பாடு பஞ்சாயத்து துணை தலைவர் ரூபஸ் மற்றும் கோவில் கமிட்டி தலைவர்கள் பயஸ், கயஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தலைமை தாங்கி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசையும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன.  பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன.
 
பின்னர் ஆட்சியர் ரவிகுமார் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 163 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பகுதி உள்ளது. அதில் மணப்பாடு கடற்கரை கிராமம்தான் மிகப்பெரியது. இது ஒரு அழகான கிராமம். இங்குள்ள மக்களுக்கு முக அழகை விட மன அழகு மிக அதிகம். எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் இங்கு தேசிய அளவில் நடைபெற்ற போட்டியை இருதரப்பு மக்களும் ஒற்றுமையாக இருந்து வெளிநாட்டு வீரர்களை வரவேற்று நீங்கள் ஆதரவு கொடுத்தது மறக்க முடியாது.
 
மணப்பாடு கிராமம் இந்திய சுற்றுலா துறையில் இடம் பெறும். இங்கு ரூ.7 கோடி மதிப்பில் விளையாட்டு அகாடமி அமைப்பதற்கும், ரூ.5 கோடி மதிப்பில் பூங்கா, சாலை சீரமைப்பு, நவீன விளக்குகள் ஆகியவற்றிற்கும் திட்டப்பணிகள் தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் உடனடியாக தொடங்கும். இந்த போட்டி 2-வது வருடமாக நடந்தது. இனி ஆண்டு தோறும் இங்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இவ்வாறு ஆட்சியர் ரவிகுமார் பேசினார்.
 
விழாவில் சார் ஆட்சியர்கள் கோபால சுந்தர்ராஜ் (தூத்துக்குடி), தியாகராஜன் (திருச்செந்தூர்), திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி, சங்கர நாராயணன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாசானமுத்து, சங்கர், பாலசுப்பிரணியன், விளையாட்டு போட்டி உதவி இயக்குனர் பிரான்சினா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: