Wednesday, August 31, 2016

On Wednesday, August 31, 2016 by Unknown


மணப்பாறை: திருச்சி மணப்பாறையில் 7 ஆயிரம் மாணவ மாணவிகள் தமிழின் முதல் எழுத்தான அ வடிவில் நின்று கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் அமைப்பு ஒன்று தமிழ் மொழியின் முதல் எழுத்தான அ வடிவில் மாணவ மாணவியரை நிற்க வைத்து கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியில் நேற்று ஈடுபட்டது. இதற்கான பணிகள் கடந்த ஒரு வார காலமாகவே நடந்து வந்த நிலையில், நேற்று கோவில்பட்டி சாலையில் உள்ள தியாகேசர் ஆலை பள்ளி மைதானத்தில் அ எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது. பின்னர், அந்த வடிவத்தின் மீது மாணவர்கள் நிற்கும் அளவிற்கு கட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி போது, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அ வடிவத்தில் தங்களுகென்று ஒதுக்கப்பட்ட கட்டங்களில் சென்று அமர்ந்து கொண்டனர். பின்னர், அனைவரும் ஒரே நேரத்தில் மொத்தமாக எழுந்து நின்று கையில் வைத்திருந்த மஞ்சள் நிற அட்டைகளை 5 நிமிடம் உயர்த்திப் பிடித்தனர். அப்போது மேலிருந்து பார்ப்பதற்கு அ என்ற தமிழ் மொழின் முதல் எழுத்து அழகாக மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் திருக்குறளின் 4 அத்தியாயங்களில் உள்ள 40 குறள்களையும் ஒருமித்த குரலில் ஒரே மாதிரி கூறி அங்கிருந்தவர்களை அசத்தினார்கள். இந்த சாதனை நிகழ்ச்சிக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதற்கு முன்னர் 2000 பேர் கலந்து கொண்டு ஆங்கில எழுத்தான எம் வடிவில் நின்றதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. இந்நிலையில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.