Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    


திருப்பூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடந்தது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால், நேற்று நடந்த இந்த கூட்டம் கடைசி கூட்டமாக அமைந்தது. கூட்டத்துக்கு மேயர் அ.விசாலாட்சி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் அசோகன் முன்னிலைவகித்தார்.கூட்டம் தொடங்கியதும், காவிரி நீர் பிரச்சினையில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததற்கும், இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்ததற்கும் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து மேயர் இரண்டு சிறப்பு தீர்மானங்களை கொண்டுவந்தார்.எம்.எல்.ஏ. பாராட்டு

இதைத்தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் பேசினார். அப்போது, தான் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டது முதல் துணை மேயராக பணியாற்றியது வரை நினைவு கூறியதுடன், மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.518 கோடிக்கு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பாராட்டினார்.மேலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால், குடிநீர் பணிகள், சுகாதார பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.ரூ.518 கோடிக்கு பணிகள்

பின்னர், மேயர் பேசும் போது, கடந்த 5 ஆண்டுகளில், ரூ.518 கோடி மதிப்பில் தார்சாலைகள், மழைநீர் வடிகால்கள், கட்டிடங்கள் என்று 6 ஆயிரத்து 76 வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இதற்கு உறுதுணையாக இருந்த ஆணையாளருக்கும், அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் யாருடைய மனதையாவது புண்படுத்தும் வகையில் பேசியிருந்தால் அதற்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து மாநகராட்சியின் மூத்த உறுப்பினரும், நிலைக்குழு தலைவருமான முருகசாமி பேசும் போது, கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றிய தான், இன்று(நேற்று) கலந்து கொண்டுள்ள இந்த கூட்டம் 100–வது கூட்டம் என்று பெருமிதம்கொண்டார்.எதிர்க்கட்சியினர் பாராட்டு

பின்னர், எதிர்க்கட்சி கவுன்சிலர்களான சுப்பிரமணியம்(தி.மு.க.), ரவிச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), கோவிந்தராஜ்(தே.மு.தி.க.), மாரப்பன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள். அப்போது தி.மு.க. கவுன்சிலர் தவிர்த்து மற்றவர்கள் பேசும் போது, தங்கள் வார்டுகளில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கி போதுமான ஒத்துழைப்பு அளித்த மேயர் மற்றும் அதிகாரிகளை பாராட்டி பேசினர். அத்துடன், பாதாள சாக்கடை திட்டம், 4–வது குடிநீர் திட்டம், திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை நிறைவேற்ற இனி வரும் காலங்களிலாவது கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணியம் பேசும்போது, மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் நடக்கவில்லை என்று கூறினார். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர் இந்த மாமன்றத்தில் கூறிய பொய்யான தகவலை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வாக்குவாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

0 comments: