Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    


திருப்பூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கும் தொழில் நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்தி மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆய்வு கூட்டம்

அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றம் செய்யப்படுவது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:–நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றியும், முறையான சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவாமலும் பல நிறுவனங்கள் சாயக்கழிவு நீரை வெளியேற்றி வருகிறது. அந்த தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஆர்.டி.ஓ., மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த மாதம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதின்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கிய 16 சலவை மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து அதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.இது தவிர கழிவுநீரை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் வெளியேற்றிய 5 சாயத்தொழிற்சாலைகளில் மின் இணைப்பு ஏற்கனவே துண்டிக்கப்பட்டது. எனவே அனுமதியின்றி எந்த ஒரு சாய, சலவை மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள் இயங்க கூடாது என்றும் மற்றும் அனுமதி பெற்று இயங்கும் சாய, சலவை மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள் கழிவுநீரை மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்து இயக்க வேண்டும். இதனை மீறும் தொழிற்சாலைகளின் இயக்கத்தை நிறுத்தி, மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அதிகாரிகளுக்கு உத்தரவு

இதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கிய 13 சலவை மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கவும், இயக்கத்தை நிறுத்தவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் இளங்குமரன்(வடக்கு), மதிவாணன்(பல்லடம்), மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பறக்கும்படை அதிகாரி ஜெயலட்சுமி, மின்சார வாரிய உதவி கோட்டபொறியாளர் சண்முகம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சபரிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments: