Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

ஒசூர்: காவிரி பிரச்னையால் கர்நாடகம் செல்லும் தமிழகப் பேருந்துகள் மூன்றாவது நாளாக இன்றும் புதன்கிழமையும் நிறுத்தப்பட்டுள்ளன. பெங்களூருக்குச் செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் ஒசூரில் இறக்கி விடப்பட்டதால், பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினர்.
  தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களான மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்பேட்டைஉள்பட பல இடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர், காவிரி பாதுகாப்புக் குழுவினர் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால் மேட்டூர், பாலாறு வழியாக கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால், மைசூரு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மூன்றாவது நாளாக இன்றும் புதன்கிழமையும் இயக்கப்படவில்லை. அதனால், பேருந்துகள் ஒசூர் மற்றும் மேட்டூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
  மூன்றாவது நாளாக பேக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்திலிருந்து மாதேஸ்வரன் சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்த தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் செல்லும் 500-க்கும் அதிகமான அரசுப் பேருந்துகள் ஒசூரிலேயே திருப்பி விடப்பட்டுள்ளன. பெங்களூரில் இருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் ஒசூர் அட்கோ மற்றும் சிப்காட்டில் போலீஸார் நிறுத்தி, எச்சரித்து வருகின்றனர். இதனால் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள்மட்டும் செல்கின்றன. தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் எல்லையிலேயே திரும்பி வருகின்றன.

இந்த நிலையில், 3 நாள்கள் தொடர் விடுமுறையில் தமிழகத்துக்கு வந்த கர்நாடக மாநிலத்தில் பணியில் இருக்கும் தமிழர்கள் பெங்களூரு செல்ல முடியாமல் ஒசூரில் தவித்தனர். சிலர் அத்திப்பள்ளிவரை நடந்து சென்று, அங்கிருந்து கர்நாடக மாநிலப் பேருந்துகளில் சென்றனர்.
கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் அத்திப்பள்ளி வரை இயக்கப்பட்டன.

ஒசூர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், பேருந்து நிலையம், மூக்கணடப்பள்ளி, சூசூவாடி, அத்திப்பள்ளி போன்ற இடங்களில் தமிழக போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று அத்திப்பள்ளியில் கர்நாடக மாநில போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

0 comments: