Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

முத்தூர் அருகே மொபட்டில் சென்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியையிடம் 5½ பவுன் தாலிக்கொடியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :–அரசு பள்ளி தலைமை ஆசிரியை

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில்–ஈரோடு ரோடு கொங்குநகரை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மனைவி வளர்மதி (வயது 46). இவர் முத்தூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் காலையில் மொபட்டில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவார்.இந்த நிலையில் தலைமை ஆசிரியை வளர்மதி வழக்கம் போல் நேற்று காலை 8.45 மணிக்கு தனது மொபட்டில் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். முத்தூர்–வெள்ளகோவில் ரோடு காங்கேயம்பாளையம் பிரிவில் வந்த அவர் மெயின் ரோட்டோரத்தில் மொபட்டை மெதுவாக ஓட்டி வந்ததாக தெரிகிறது.5½ பவுன் தாலிக்கொடி பறிப்பு

அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென்று எதிர்பாராதவிதமாக தலைமை ஆசிரியை வளர்மதியின் கழுத்தில் இருந்த 5½ பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு அவரை மொபட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டு விட்டு வேகமாக மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியை வளர்மதி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். ஆனாலும் அந்த மர்ம ஆசாமிகள் வேகமாக சென்றுவிட்டதால் அவர்களை பிடிக்க முடியவில்லை. மேலும் மர்ம ஆசாமிகள் தள்ளிவிட்டதில் மொபட்டில் இருந்து கீழே விழுந்த தலைமை ஆசிரியை வளர்மதிக்கு தலை, கை, கால், முதுகில் காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து தலைமை ஆசிரியை வளர்மதியை மீட்டு முத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் ஆசிரியை வளர்மதி மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போலீஸ் விசாரணை

இது பற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்து தாலிக்கொடியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். முத்தூர், வெள்ளகோவில் பகுதிகளில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவம் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: