Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

சிரோகி: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஓட்டலில் மலைப்பாம்பு பிடிபட்டது. அந்த பாம்பின் அருகே சென்று செல்பி எடுத்த வாலிபரை அந்த பாம்பு பாய்ந்து சென்று கடித்து விட்டது.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்றில் திடீரென சில அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது.  இதை ஊழியர்கள் கவனித்து அலறினர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி வாலிபர்கள் திரண்டு வந்து துணிச்சலாக மலைப்பாம்பை பிடித்தனர். இதற்கிடையே, ஓட்டல் நிர்வாகிகள், வனத்துறைக்கு தகவல் கொடுத்திருந்தனர். அவர்களும் ஓட்டலுக்கு வரவே பிடித்த பாம்பை அவர்களிடம் வாலிபர்கள் ஒப்படைத்தனர். 

முன்னதாக, மலைப்பாம்பை கையில் பிடித்த நிலையில் வாலிபர்கள், புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். மேலும், ஓட்டலில் பாம்பு பிடித்த சம்பவத்தை விவரித்துக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், ஆர்வக் கோளாறால் மலைப்பாம்பின் தலைப்பகுதி அருகே சென்று அதனுடன் போஸ் கொடுப்பது போல நின்று செல்பி எடுத்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் பாம்பு துள்ளிச் சென்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாலிபரின் தோளில் பாய்ந்து கவ்வியது. 

இதை கண்டு கூட்டத்தினர் அலறினர். பாம்பிடம் இருந்து கையை உதறிய வாலிபர் பயத்தில் சற்று தள்ளி சென்று விழுந்தார். பின்னர், காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நல்ல வேளையாக சிறிய காயத்துடன் அவர் உயிர் தப்பினார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செல்பியால் மலைப்பாம்பு வாயில் சிக்கிய வாலிபர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

0 comments: