Thursday, December 15, 2016

On Thursday, December 15, 2016 by Unknown in    


கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குடியிருந்து கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வறுமையில் இருக்கும் இந்த தம்பதியினருக்கு குழந்தையை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து தம்பதியினருக்கு தெரிந்த ஒரு நபர் மூலம் கரூரை சேர்ந்த குழந்தையில்லாத மற்றொரு தம்பதிக்கு, குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு வந்தது. இந்த தகவலை அடுத்து குழந்தையின் பெற்றோரையும், குழந்தையை விலைக்கு தத்தெடுத்ததாக கூறப்படும் தம்பதியினரையும் அழைத்து அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வறுமையின் காரணமாக தெரிந்த நபர் மூலம் கரூரில் உள்ள ஒரு தம்பதிக்கு குழந்தையை கொடுத்ததாகவும், தற்போது குழந்தையை தாங்களே வளர்க்க தயாராக இருப்பதாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்கும் விதமாக, இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அங்குள்ள அதிகாரிகள் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்று திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்

0 comments: