Wednesday, March 18, 2020

On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in    
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பாராட்டுக்குரியது. திரையரங்கம், மால்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என்பது ஏற்க கூடியது. ஆனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, பால் உள்ளிட்ட கடைகளை பூட்ட கட்டாயப்படுத்துவது சரியல்ல. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட வேண்டிய வர்த்தக நிறுவனங்கள் எவை? எவை? என்பதை மாநில அரசு முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட அளவில் ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையரும் இதை முடிவு செய்யக்கூடாது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
 மார்ச் 31ஆம் தேதி வரை வர்த்தகர்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளை முன்தேதியிட்டு வழங்கியுள்ளார்கள். தற்போது வர்த்தக நிறுவனங்கள் 31ம் தேதி வரை மூடப்படுவதால் வங்கிகளில் அத்தகைய காசோலைகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும். வருமான வரி செலுத்துவதற்கான கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி.க்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். அதே போல் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி, உள்ளாட்சி கடைகளின் வாடகை போன்றவற்றை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அனைத்துக் கடைகளையும் மூட வற்புறுத்துவதால் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கு அன்றாட அத்தியாவசிய பொருட்களை யார் வழங்குவது என்ற கேள்விக்குறி எழுகிறது. காய்கறி கடைகளை மூடினால்  விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் விளைவிக்கும் காய்கறிகளை வியாபாரிகள் தான் விற்பனை செய்கின்றனர். சில இடங்களில் திடீரென்று கடையை மூடும்படி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். வியாபாரிகளை அச்சுறுத்தி துன்புறுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எந்தெந்த கடைகள். அடைக்க வேண்டும்? எந்தெந்த கடைகள் அடைக்க கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அவ்வாறு சீல் வைத்தால் மாநகராட்சி ஆணையரை சந்தித்து தான் பின்னர் கடையை திறக்க முடியும். இதுதொடர்பாக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை ஆகியோரை சந்திக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார். உடன் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

0 comments: