Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பழனி ஆட்டோ டிரைவர்களான உதயகுமார் (வயது 36), பாலாஜி (26) ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பூபாலன், செந்தில்பாண்டி ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரட்டை கொலை வழக்கில் மேலும் 7 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தலைமறைவாக இருக்கும் 7 பேரை பிடிக்க தீவீர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது பழனி வையாபுரி குளம் 5 கண் பாலம் அருகே பதுங்கி இருந்த அய்யாவு (29), ரியாஸ்தீன் (23) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், பெரியாவுடையார் கோவில் அருகே நடந்த ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஏற்கனவே அய்யாவு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பழனி இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பழனி அடிவாரம் தபால் நிலைய ரோடு பகுதியை சேர்ந்த துர்க்கைராஜ் (வயது 30) திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அப்போது அவருடைய தாடை, காது பகுதிகளில் வெட்டு காயம் இருந்தது.

இதை கண்ட நீதிபதி, துர்க்கைராஜை செசன்சு கோர்ட்டு போலீசாரிடம் ஒப்படைத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து துர்க்கைராஜை திருச்சி அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

0 comments: