தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலமாக ரூ 52.50 லட்சம் வருமானம் வந்தது. வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்ட இந்த வருமானத்தை கர்நாடக உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவரது வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் நேற்றைய இறுதிவாதத்தின் போது தெரிவித்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும்,உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ்,மூத்த வழக்கறிஞர் பி.குமார்,அசோகன்,பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல‌ர் ஆஜராகின‌ர்.
இதைத் தொடர்ந்து 6-வது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். அப்போது அவர் வாதிட்டதாவது:
1991-ம் ஆண்டு முதல் முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.இதையடுத்து 1992-ம் ஆண்டு தனது 44-வது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடினார். அப்போது அவருக்கு கட்சித் தொண்டர்கள் வெள்ளி, தங்கத்தால் ஆன நிறைய பரிசு பொருட்களை வழங்கினர். மேலும் பலர் வங்கி வரைவோலையாக ரூ 1.5 கோடி அன்பளிப்பாக வழங்கினர்.
அண்ணா, எம்ஜிஆருக்கு நீதிபதி புகழாரம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, ''எதற்காக எவ்வளவு பரிசுப்பொருட்கள் வழங்க‌ வேண்டும்? கட்சித் தொண்டர்கள் எந்த வழிமுறையில் இவ்வளவு விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை வழங்குகின்றனர்'' என வினவினார். அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், ''தமிழகத்தில் தனிநபர் வழிபாடு அதிகம். தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் ரசிகர்கள் பரிசுப்பொருட்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
திமுகவை துவ‌ங்கிய அறிஞர் அண்ணாவுக்கும்,அரசியலிலும்,சினிமாவிலும் கொடிகட்டி பறந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் ஏராளமான தொண்டர்கள் இருந்தனர்.அவர்களது பிறந்த நாளன்று தொண்ட‌ர்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம்.எம்.ஜி.ஆருக்கு பிறகு முதல்வரான அவரது மனைவி ஜானகிக்கு தொண்டர்கள் அதிகளவில் உருவாகவில்லை.
ஆனால் ஜெயலலிதாவை 'புரட்சி தலைவி' என தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர்.அவரது பிறந்த நாளின் போது ஏராளமான பரிசு பொருட்களையும், அன்பளிப்புகளையும் வழங்கினர்.
எம்.ஜி.ஆர் கூட ஜெயலலிதாவுக்கு வெள்ளி செங்கோல் வழங்கியுள்ளார். தற்போது நடிகர் ரஜினியின் பிறந்த நாள், அவரது திரைப்படம் வெளியாகும் நாள் போன்ற முக்கிய நாட்களில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்'' என விளக்கம் அளித்தார்.
அப்போது நீதிபதி குமாரசாமி, ''ஆமாம் தி.மு.க. நிறுவனர் அண்ணாதுரை. மாபெரும் தலைவராக இருந்ததாலே, காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார்.தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆழமாக வேரூன்ற காரணமாக இருந்தார்.அதன் பிறகு எம்.ஜி.ஆர்., மக்கள் ஆதரவு பெற்றதால், அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே, தேர்தலில் வெற்றி பெற்றார்'' என்றார்.
1116 கிலோ வெள்ளி எங்கே?
இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 1116 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ 48.80 லட்சம் என மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவிடம் 1250 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தது. இத‌ன் மதிப்பு ரூ.8.37 லட்சம் என மதிப்பிடப் பட்டதை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஜெயலலிதாவிடம் இருக்கும் பெரும்பாலான வெள்ளிப்பொருட்கள் வழக்கு காலத்திற்கு (1991-96) முன்பாக வாங்கப்பட்டவை. இதில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு அளித்த வெள்ளி வாள், வெள்ளி கிரீடம்,வெள்ளி செங்கோல் உள்ளிட்டவையும் அடங்கும்.மேலும் சில பொருட்கள் தொண்டர்கள் வழங்கிய பரிசு பொருட்கள் ஆகும். இதனை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சட்டத்திற்கு எதிராக ஜெயலலிதாவின் சொத்தாக வழக்கில் சேர்த்துள்ளனர்'' என்றார்.
அதற்கு நீதிபதி, ''ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 1116 கிலோ வெள்ளிப் பொருட்கள் எங்கே?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார். அவரது உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி,'' ஜெயலலிதாவின் உதவியாளர் பாஸ்கர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி அந்த வெள்ளிப்பொருட்களை பெற்றுள்ளார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்'' என்றார்.
அவர் மேலும் பேசும்போது, ''சட்டபடி பதவி காலத்தில் பொது ஊழியருக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.ஆனால் ஜெயலலிதா தனக்கு வந்த வெள்ளிப் பரிசுகளை பயன்படுத்தியுள்ளார்.சிலவற்றை அதிமுக அலுவலகத்திற்கு அளித்துள்ளார். அன்பளிப்பாக கிடைத்த பணத்தை ஜெயலலிதா பயன்படுத்தியுள்ளார். எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அத‌னை ஜெயலலிதாவின் சொத்தில் சேர்த்துள்ளனர்'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, ''ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப்பொருட்கள் பற்றிய விபரங்களையும், பாஸ்கரின் இறப்பு சான்றிதழையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞர் பவானிசிங்குக்கு உத்தரவிட்டார்.
திராட்சை தோட்ட வருமான‌ம்
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது:
ஆந்திர மாநிலம் பஷீர்பாக் என்ற இடத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுக்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருக்கிறது.இங்கு 1964-ம் ஆண்டு முதல் முதன்மை பயிராக திராட்சையும், ஊடு பயிராக தென்னை, தர்பூசணி, காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.இதன் மூலம் 1972-ம் ஆண்டு தனக்கு ரூ.1 லட்சம் வருமானம் வந்ததாக ஜெயலலிதா வருமான வரித்துறையில் கணக்கு காட்டியுள்ளார்.
1987-93 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலமாக ரூ 7.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரை சராசரியாக வருமானம் கிடைத்ததாக ஜெயலலிதா வருமான வரி செலுத்தியுள்ளார். ஆனால் திராட்சை தோட்டத்தின் மூலம் 1991-96 காலக்கட்டத்தில் ஜெயலலிதாவுக்கு ஆண்டுதோறும் ரூ 1 லட்சம் மட்டுமே வருமானம் வந்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.இது முற்றிலும் தவறானது என கீழ் நீதிமன்றமே ஒப்புக்கொண்டுள்ளது.
அதனால் கீழ்நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா தோராயமாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் வந்ததாக கூறியுள்ளார். 1971-ம் ஆண்டு ரூ.1 லட்சம் வருமானம் வந்தது என்றால் 1991-96 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே வருமானம் வந்திருக்கும் என்பது தவறான கணிப்பு அல்லவா?
வருமான வரித்துறை கணக்குபடி,ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலமாக ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ரூ.52.50 லட்சம் வந்துள்ளது. இதனை உறுதி செய்வதற்காக 1993, 93, 99 ஆகிய ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தை நேரடியாக பார்வையிட்டு, இந்த மதிப்பை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜெயலலிதா தாக்கல் செய்த ரூ.52.50 லட்சம் தோட்ட வருமானத்தை வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆந்திர மாநில தோட்டக்கலைத் துறையும், நாபார்ட் துறையும் ஒப்புக்கொண்ட வருமானத்தை கீழ் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. சொத்துக்குவிப்பு வழக்குகளில் வருமான வரித்துறை தீர்ப்பாயம் அளித்த சான்றிதழை முக்கிய ஆதாரமாக கருதலாம் என பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே கீழ்நீதிமன்றம் ஏற்றுகொள்ள தவறியதை தோட்ட வருமானத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.
திமுக மனு மீது 27-ம் தேதி தீர்ப்பு
இதனிடையே அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''இவ்வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை 3-ம் தரப்பாக சேர்த்துக்கொள்ளுமாறு கோரிய மனு மீது முடிவை அறிவிக்குமாறு'' கோரினார். அதற்கு நீதிபதி, ''திமுக வழக்கறிஞர்கள் எங்கே?'' என கேட்டார். அதற்கு பவானிசிங் ''அவர்க‌ள் டெல்லிக்கு போய்விட்டார்கள்'' என்றார்.
இது தொடர்பாக வழக்கு முடியும் நேரத்தில் ஆஜரான திமுக வழக்கறிஞர் நடேசன், ''தங்களது தரப்பு வழக்கறிஞர்கள் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருப்பதாக'' தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி,''அன்பழகனின் மனு தொடர்பாக வருகிற செவ்வாய்க்கிழமை விசாரித்து, முடிவு அறிவிக்கப்படும்'' என்றார்.
பெங்களூரு
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 12-வது நாளாக நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் இன்றும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரர ராவ் 7-வது நாளாக தொடர்ந்தார். ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருட்கள், நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு வந்த சந்தா தொகை குறித்த விபரங்களை பற்றி வாதிட்டு வருகிறார்.