Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெரிய கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பாண்டி .இவர் பெரிய கட்டளையில் உள்ள சர்வே எண் 116 ல் சுமார் 59 சென்ட் வண்டிப்பாதை ,மயானப் பாதை மற்றும் ஊரணியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பெரிய கட்டளை கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர் .இதனால் விவசாய இடுபொருட்கள் எடுத்து செல்வதற்கு இடையூறாக உள்ளது .59 சென்டையும் ஆக்கிரமித்து கார் செட் ,வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் .இதனை தடுத்தி நிறுத்தி பாதையை மீட்டு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரை டி வி எஸ் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி அக்டோபர் 11 ல் நடைபெறுகிறது .காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கிறது .இதில் மேயர் ராஜன் செல்லப்பா கலந்து கொள்கிறார் .தொடர்ந்து மாநில ஆளுநர் ரோசையா கலந்து கொண்டு முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் ,ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார் .மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஆந்திர ஐ ஏ எஸ் அதிகாரி சுகுமாறன்,திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி ,ஆகியோர் பங்கேற்க உள்ளனர் .மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகளும் நடைபெற உள்ளதாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் , பள்ளி தலைமை ஆசிரியை வித்யாவதி ,முன்னாள் சேர்மன் கல்யாண சுந்தரம் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    

''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    

மதுரையில் திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தேடப்பட்டு வந்தவர் அட்டாக் பாண்டி. தலைமறைவாக உள்ள இவர் ஐதராபாத்தில் உள்ளதாக தகவல் கிடைத்து, அவரை கைது செய்ய போலீசார் அங்கு விரைந்துள்ளதாகவும், சுற்றி வளைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மதுரை போலீசாரிடம் கேட்டதற்கு, தங்களுக்கும் அப்படித்தான் தகவல் வந்துள்ளது என்று கூறிய அவர்கள், இருந்தபோதும் இதனை உறுதிப்படுத்த முடியவிலை என்று கூறினர்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது தேனா புதுக்கோட்டை கிராமம். இங்கு, முதுகளத்தூர் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் முருகனுக்கு தொடர்புடைய செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரி அருகே ராமநாதபுரம் மாவட்ட எல்லையான சூலூர் கிராமத்தில் துரைப்பாண்டி என்ற வழக்கறிஞருக்கு செம்மண் குவாரி உள்ளது.
இந்நிலையில். முருகனுக்கு தொடர்புடைய குவாரிக்கு லைசன்ஸ் காலாவதி ஆகிவிட்டதால் அதை புதுப்பிக்க முருகன் விண்ணப்பம் செய்துள்ளார். இதனால் கடந்த ஒருவாரமாக அவரது குவாரி செயல்படாமல் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் முருகன் குவாரியில் இருந்து துரைபாண்டி குவாரிக்கு மணல் அள்ளபட்டு, விற்பனை செய்யபட்டு வந்துள்ளது. இரவு நேரங்களில் இந்த மணல் கடத்தும் விவகாரம் மானாமதுரை காவல்நிலையத்திற்கு தகவல் போயிருக்கிறது.
செப்டம்பர் 23ஆம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில், மானாமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், ஊர்க்காவல்படை காவலர் இருவருடன் ஸ்பாட்டுக்கு போயிருக்கிறார். அப்போது முத்துகிருஷ்ணன் மஃப்டியில் இருந்திருக்கிறார். மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை நிறுத்தி விசாரித்தாராம். அப்பொழுது லாரி ஓட்டுனர்களுக்கும், போலீஸுக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர் துரைப்பாண்டிக்கு தகவல் சொல்ல... அவர் விரைந்து வந்திருக்கிறார். இவரும் போலீஸாருடன் வாக்குவாதம்... கைகலப்பு என்று அதிரடியாக இறங்க அங்கே கலாட்டா அரங்கேறிருக்கிறது.
போலீஸாருக்கு சரமாரியாக அடி விழ... ஒரு கட்டத்தில், எஸ்.ஐ.யான முத்துகிருஷ்ணன் மின்னல் வேகத்தில் அவரது துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மணல் கோஷ்டியினர், மிரண்டு போய் அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க ஒடிவிட்டார்களாம். அதையடுத்து, நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதோடு, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சமீபத்தில் சந்தித்து பேசிய ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களும், நீங்கள் கடந்து வந்த பாதைகளும் எனக்கு வியப்பளிப்பதாக உள்ளன.
தமிழக மக்கள் அனைவரும் உங்களை 'அம்மா' என்று அழைப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.

ஏனென்றால் நீங்கள் உங்கள் மாநிலத்தில் உள்ள பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வகுத்துள்ள பணிகளும் மிக சிறப்பானது.
அனைத்து மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை எல்லாம் நான் வேறு எங்கும் கேள்விப்பட்டதில்லை.

மேலும், நீங்கள் ஏற்படுத்தியுள்ள காற்றாலை மின் திட்டங்கள், சுற்றுசூழல் விழிப்புணர்வு திட்டங்கள் அனைத்தும் மிகவும் பாராட்டக்கூடியவை.காற்றாலை மூலம் மின் உற்பத்தி பெறுவது சுற்றுசூழலுக்கு ஏற்ற விடயம்.

அதிலும், இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் 39 சதவீத தமிழகத்தின் பங்கு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.நான்கு வருடங்களுக்கு முன்னர் 'R20' என்ற நிறுவனத்தை நான் ஏற்படுத்தினேன்.

காலநிலை மாற்றம் ஏற்படும் தருணத்தில் சுத்தமான ஆற்றலை உருவாக்குவதற்காக 560க்கும் மேற்பட்ட நகரங்களையும் மாகாணங்களையும் இந்த நிறுவனத்தின் மூலம் இணைத்து சில செயல்முறைகளை கையாண்டு வருகிறோம். இந்த திட்டத்தில் தமிழகமும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

இதுகுறித்த விவரங்களை நான் விரைவில் உங்கள் மாநில சுற்றுசூழல் அமைச்சகத்தை தொடர்புகொண்டு பேசுகிறேன். இது ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது மாநிலத்துக்கான வளர்ச்சி பாதை இல்லை, ஒட்டு மொத்த உலகுக்கும் வழிகாட்டும் நடைமுறை ஆகும். நான் கலிஃபோர்னியாவில் செய்ததை நீங்கள் தமிழகத்தில் செய்துள்ளீர்கள்.

இந்த திட்டத்தில் உங்கள் மாநிலமும் இணைவதன் மூலம் வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. நீங்கள் உங்களது சிறப்பான பணியை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம் என குறிப்பிட்டுள்ளார்.
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய்  இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நகரமாக மாறி வருகிறது. கடந்த 9 மாதங்களில் மதுரையில் 64 கொலைகள் நடந்துள்ளன. பழிக்குப் பழி, ஆதாயக் கொலை, அரசியல் கொலை என்று காவல் துறை காரணங்கள் பலவாகச் சொன்னாலும் கொலை கொலைதானே?

மதுரை, புதூர் தி.மு.க செயலாளர் வேலுவின் மகன் முத்துப்பாண்டி தி.மு.க.வின் ஒன்றிய துணை அமைப்பாளர். இவர், கடந்த 18ஆம் தேதி மதுரை அரசு ஐ.டி.ஐ எதிரே உள்ள சாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க. இளைஞர் அணியைச் சேர்ந்த முகேஷ் சர்மா, ராஜ்குமார் உட்பட நான்கு பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. முகேஷ் சர்மா தி.மு.க. பிரமுகர் குருசாமியின் மருமகன். இது பழிக்குப் பழி சம்பவம் என்று போலீஸ் தரப்பு கூற...

அதே நாளில், தல்லாகுளம் பகுதியில் கருப்பையா, ராம்கி, ரவிக்குமார் என்று மூன்று நபர்களை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டுச் சென்றது ஒரு டீம். ரத்த வெள்ளத்தில் கருப்பையாவின் உயிர் பிரிய, மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். ‘‘தி.மு.க தல்லாகுளம் பகுதி பொறுப்பாளர் கருணாநிதியின் கார் டிரைவரான கருப்பையா ரியல் எஸ்டேட் பிரச்னையின் தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நான்கு பேர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். விசாரணை நடக்கிறது’’ என்கிறார்கள் போலீஸார்.

இரவில் இந்தச் சம்பவங்கள் நடக்க, பகலில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு வீட்டுக்குள் மூவரைக் கொடூரமாகக் குத்தி, குதறிவிட்டுச் சென்றிருக்கிறது 10 பேர் கொண்ட கும்பல். 10க்கு 10 அளவு கொண்ட அந்த வீட்டில் உறுப்புகள் அனைத்தும் சிதறிக் கிடக்க, சுவரில் ரத்தம் படிந்து தரையும் ரத்தக்குளமாகக் காட்சியளிக்க பல்வேறு கொலைகளைப் பார்த்து பழகிப்போன காவல் துறையே கர்சீப் எடுத்து மூக்கை பொத்திக் கொண்டது.

இக்கொலைப்பற்றி ஜெய்ஹிந்த்புரம் போலீஸார், ‘‘குண்டுமலை இருளாயி மகன்களான கருப்பும், பாம்பு நாகராஜும் சகோதரர்கள். பாம்பு நாகராஜ், தி.மு.க பிரமுகர் அப்பளராஜாவின் கூட்டாளி. அப்பளராஜா மதுரையில் பிரபல ரவுடியாக இருந்து சென்னையில் செட்டில் ஆன டாக் ரவியின் கூட்டாளி. மதுரையில் டாக் ரவியிடன் கவாத்து திருப்பதியும், அப்பளராஜாவும் இணைந்து பல சம்பவங்கள் செய்தனர். டாக் ரவி சென்னை சென்றதும் மதுரையில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளுக்கு யார் கோலோச்சுவது என்று இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கவாத்தின் ஆளான சவுந்தரை பாம்பு நாகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து வெட்டினார்கள்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அப்பளராஜா வேறு ஒரு வழக்கில் கோர்ட்டில் சரண்டர் ஆகி மதுரை ஜெயிலில் இருக்கிறார். பாம்பு நாகராஜ் கோவைக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நடந்த அன்று காலையில் ஊருக்கு வந்த அவரைப் பழிவாங்க கவாத்து திருப்பதியின் தம்பி குண்டுமணி, ராஜா உள்பட 10 நபர்கள் இந்த மூன்று கொலைகளை செய்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின்போது டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் என்கிற நபரும் கொலை செய்யப்பட்டார். கொலையை நேரில் பார்த்த பாம்பு நாகராஜின் தாத்தாவை மட்டும் விட்டு வைத்து விட்டுச் சென்றது அந்தக் கும்பல்’’ என்றனர்.

இதேபோல், கற்பழிப்பு சம்பவங்கள் 23, கொள்ளை சம்பவங்கள் 81, பாலியல் துன்புறுத்தல்கள் 9, கூட்டு கொள்ளைகள் 4, சாதாரண க்ரைம் சம்பவங்கள் 32 என்று க்ரைம் பட்டியலை வாசிக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்!

கொலைப் பட்டியல்

2014ஆம் ஆண்டு மதுரையில் புதுவருடம் பிறக்கும் பொழுதே கொலையுடன் பிறந்தது, சரியாக ஹாப்பி நியூ இயர் சொல்லும் 12 மணியளவில் மதுரை புதூரில் செந்திலநாதன் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். காரணம் போதையில் தகராறு.

ஜனவரி 3: அன்று வில்லாபுரத்தில் தமிழரசன் என்பவர் கொலை. காரணம், கள்ளக்காதல்.

ஜனவரி 4: வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கண்ணன். இருவரும் இரட்டைக்கொலை செய்யப்பட்டனர்.  கோஷ்டி மோதலில் நடந்த  பழி தீர்க்கும் சம்பவம்.

ஜனவரி 8: தல்லாக்குளத்தை சேர்ந்த அழகுபாண்டி என்பவர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டார்.

ஜனவரி 22: கரும்பாலை பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் காதல் பிரச்னையில் வெட்டிக்கொலை.   

ஜனவரி 23: வில்லாபுரத்தில், வாழப்போன இடத்தில் அடிக்கடி தொல்லை தருகிறார் என்கிற காரணத்துக்காக அக்காவின் மாமியாரை கொலை செய்தார் ஒரு பெண்.  பிறகு, போலீஸில் சரணடைந்தார்.

ஜனவரி 30:  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால்,  மேலூர் அரிட்ட பட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை அவரது மருமகள் தனது கள்ளக்காதலன் மூலம் அவரது தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

பிப்ரவரி 6: வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த  ஸ்வீட்ஸ் கடை ஓனரின் மகள், பட்டப் பகலில் வீட்டுக்குள் கொலைசெய்து கிடந்தார். மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு வந்த அவரது கணவருக்கு பெரும் அதிர்ச்சி. கொலை செய்தது என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பிப்ரவரி 17:  மேலூர் அண்ணா காலனியில் சைக்கிளில் தெரு வழியாக போனதால் நடந்த சண்டையில் வீரன் என்பவர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார்.

பிப்ரவரி 18: மதுரை கருடர் பாலம் அடியில் இளம் வயது ஆண் பிணம் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப்  பார்த்த பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் தந்தனர். இறந்தவர் யார் என்ற விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.

பிப்ரவரி 21: பெரியார் பேருந்து நிலையத்தில் பால்பாண்டி என்பவர் வெட்டிக்கொலை. இது மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழிக்குப் பழி வாங்க செய்த கொலை.

பிப்ரவரி 22: மதிச்சியம் வைகை ஆற்றுப் பகுதியில் காமராஜர் புரத்தைச் சேர்ந்த  மணிகண்டன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுவும்கூட பழிக்குப் பழி வாங்க நடந்த கொலையே!

மார்ச் 28: சிந்தாமணி தியேட்டர் பகுதி லட்சுமிபுரம் கோகுல்நகை அடகுக்கடை ஓனர் சின்னையா என்பவர் இரவு 7 மணிக்கு கொலை. கடை ஊழியர் முருகேசனின் நண்பர் கைது. இதே நாளில் பெத்தானிய புரத்தில் பாண்டீஸ்வரி என்பவர் அவரது வீட்டில் கொலை செய்து கிடந்தார்.

மார்ச் 30:  சுப்ரமணியபுரத்தில் மாமியார்  மூக்காயி என்பரை  அவரது மருமகன் டேவிட் ஆனந்தகுமார் இரவில் கொலை செய்து போலீஸில் சரண்.

ஏப்ரல் 8: பழங்காநத்தம் பைகாரா பகுதியைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளியான கண்ணன் என்பவர் குடி போதையில் நடந்த தகராறில்  மாலை நேரத்தில்  கொலை செய்யபட்டார்.

ஏப்ரல் 10: அலங்காநல்லூரில் பரமசிவம் என்பவரை அவரது மனைவி பாப்பாத்தி தனது ஆண் நண்பரான கார்த்திக்ராஜா என்பவருடன் சேர்ந்து கொலை செய்தார். கள்ளக்காதல் விவகாரமாக இருக்கலாம் என்கிறது போலீஸ்.

ஏப்ரல் 12: தத்தனேரியில்  குடிபோதையில் அம்மா பேச்சியம்மாளை அவரது மகனே கொலை செய்துவிட்டார். போதை தெளிந்ததும் காவல் நிலையத்தில் கதறி அழுதார்.

ஏப்ரல் 14: உசிலம்பட்டியில் உறவினர்களுக்குள் நடந்த ஈகோவால் கார்த்திக்ராஜா என்பவர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ஏப்ரல் 15: அழகர் கோயிலுக்குள் உள்ள நடைபாதை பகுதியில் காலை 5 மணிக்கு  திண்டுக்கல்லைச் சேர்ந்த் முத்துப்பாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ஏப்ரல் 19: விராதனூர் பகுதியில் ஆயிரம் பிள்ளை என்கிற பெண் கொலை செய்து கிடந்தார். இதுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஏப்ரல் 21: மேலூர் கொட்டக்குடி பகுதியில் வீரம்மாள் என்பவர் கழுத்து நெரித்துக் கொலை. காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை.

மே 2: மேலூர் பகுதியில் உள்ள கல்குவாரி கிணற்றில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரைக் கடத்திவந்து கொடூரமாகக் கொலை செய்து போட்டுவிட்டுச் சென்றனர். காரணம் தெரியவில்லை.

மே 13: மாடக்குளத்தில் குடியிருப்போர் நலசங்கத் தலைவர் ஆண்டியப்பன் என்பவர் முன்விரோத பகையில் கொலைசெய்யப்பட்டார். கொலையாளி கோர்ட்டில் சரண்.

மே 21: உசிலம்பட்டியில் அப்பா மாயாண்டியை மகன் பாண்டியராஜ் வெட்டி கொலை. காரணம், குடிபோதை தகராறு.

மே 27: கே.கே. நகரில் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து வந்திருந்த விக்னேஷ் என்பவருடன் திருமண சரக்கு பார்டியில் அவரது நண்பர்களுக்குள் வாக்குவாதம். பீர் பாட்டிலால் விக்னேஷ் தலையில் அடித்துக் கொலை.

மே 30: தல்லாகுளம் பகுதியில்  நாகபாண்டி என்பவர் வெட்டிக் கொலை. இது பழிவாங்கும் கொலை சம்பவம்.

ஜூன் 1: திருமங்கலம் அ.தி.மு.க. நகரச்செயலாளர் விஜயன் என்பவரது உறவினர் செண்பக பாண்டியனை குடி போதையில் கொலை செய்தது ஒரு குரூப். இதுவும் முன்விரோத பகையில் நடந்த கொலை.

ஜூன் 2: குலமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பழனிச்சாமி என்பவர்  வெட்டிக்கொலை. காரணம், கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜூன் 3: பேரையூர் பகுதியில் உள்ள சாப்டூர் பகுதியைச் சேர்ந்த துரைபாண்டியை அவரது மனைவியே விறகு கட்டையால் அடித்துக் கொலை. காரணம். செக்ஸ் தொல்லை தந்ததால் இப்படி செய்தேன் என்றாராம் அவரது மனைவி.

ஜூன் 8: மதுரை காய்கறி சந்தையில் கடை ஏலம் எடுப்பதில் நடந்த தகராறில் சரவணக்குமார் என்பவர் வெட்டிக்கொலை. இதே நாளில் புதூரை சேர்ந்த செல்வசந்திரன் என்பவர் கொலை செய்து கிடந்தார். காரணம், இன்னமும் கண்டுபிடிக்கபடவில்லை.

ஜூன் 10: நீண்ட நாட்கள் ஆகியும் எனது மனைவியை காணவில்லை என்று உமாராணி என்பவரின் கணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் எட்டு மாதத்துக்குமுன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட உமாராணியை, அழுகிய நிலையில் கண்டெடுத்தனர். உமாராணியை 50 ஆயிரம் பணத்துக்கு அவரது தோழியான பிரேமா தனது கள்ளக்காதலன் வேல்முருகன் மூலம் கொலை செய்தது தெரியவந்தது.

ஜூன் 14: ஜெய்ஹிந்த்புரத்தில் காதணி விழா நடத்திய கல்யாண மண்டபத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் பொழுது நடந்த தகராறில் ஷேக் இப்ராஹிம் என்பவர் சம்பவ இடத்திலே வெட்டிக்கொலை. இதே நாளில் கருப்பாயூரனி ரிங் ரோட்டில் இரவு கரிமேடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி செந்தில்குமார் கொலை செய்துகிடந்தார்.

ஜூன் 15: தந்தையர் தினமான இன்று உசிலம்பட்டியில் குடிபோதையில் தந்தை அழகர்சாமியை மகன் ராமர்பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்து, செய் நன்றி காட்டினார்.

ஜூன் 19: பேரையூர் அரசபட்டியில் இரவில் செல்வம் என்பவர் உறவினர் மூலம் கொலை செய்யப்பட்டார்.

ஜூன் 29: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூரில் ஹோட்டல் நடத்தி வந்த ஜான் சுதாகர், எட்வின் என்கிற இருவரும் தன்னிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளியான சிவன்காளையை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்றனர். காரணம் குடி போதையில் நடந்த வாய் தகராறு.

ஜூலை 2: கருப்பாயூரணி குன்னத்தூரை  சேர்ந்த டிரைவர் முத்துராஜா. திடீரென ஒரு நாள்... அவரது வீட்டுக்குள் பரமசிவம் என்பவர் புகுந்து, முத்துராஜாவின் மனைவி, குழந்தைகள் என கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். முத்துராஜ் அதே இடத்தில் பிணமானார். கொலையாளி பரமசிவம் போலீஸில் “தனது மனைவியை அபகரித்துக் கொண்டதால் கொலைசெய்தேன்” என்று சொன்னார்.

ஜூலை 6: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி மாணவன் சேது சூர்யா. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் பட்டப்பகலில் கொலை செய்தது மாணவர் கோஷ்டி.

ஜூலை 9: சோழவந்தானில் சீனிவாசன் என்பவர் அவரது சகோதரனால்  கொலை செய்யப்பட்டார்.
இதே நாளில்,  கூடல்நகர் எஸ்.வி.பி. நகரில் ஆண் சடலம் ஓன்று எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவர் விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஜூலை 12: ஜீவா நகரில் சொத்து தகராறில் தம்பி கணேசனை அண்ணன் பாலமுருகன் என்பவர் கொலை செய்தார்.

ஜூலை 13: அ.தி.மு.க பிரமுகர் ஜெயபாண்டி என்பவர் மதுரை கலெக்டர் அலுவலக சாலையில் வைத்து வெட்டி கொலை. இது, பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.

ஜூலை 16: கள்ளக்காதல் தகராறில் போஸ் என்பவரை சிவபாண்டி போதையில் கொலை செய்தார்.

ஆகஸ்ட் 5: உசிலம்பட்டி மாதரையில் கோழிக்கடை பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.

ஆகஸ்ட் 6: திருமங்கலத்தில் காதர் மொய்தீன் என்பவர் கொலை.  போலீஸ் சொல்லும் காரணம், அவரது அண்ணன் பஷீர் என்பவர் தனது மைத்துனியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு சொல்லி கேட்காமல் போனதால் காதர் மொய்தீன் கொலை செய்யப்பட்டாராம்.

ஆகஸ்ட் 7: யாகப்பா நகரில் சிடி கடை நடத்தும் தகராறில் விஜயகுமார் கொலை. ஜெகதீசன் கோஷ்டியினர் செய்தனர் என்கிறது போலீஸ்.

ஆகஸ்ட் 8: மதுரை திருப்பாலை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் காலை நேரத்தில் வக்கீல் முத்துதுரையை மூன்று பேர் கொண்ட குழு அரிவாளால்வெட்டி கொத்து பரோட்டா போட்டுவிட்டு பறந்துவிட்டது. பழிக்கு பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ். அன்று இரவே அ.தி.மு.க பிரமுகர் கீழவளவு பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வெட்டி கொலை. வெட்டிய கும்பலில் ஒருவரான நிரஞ்சன் என்பவரது மணிக்கட்டில் தவறுதலாக வெட்டுக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அட்மிட் ஆகி இரண்டு நாளில் நிரஞ்சன் மரணம் அடைந்தார்
On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மங்கள்யான்: பல அரிதான தகவல்கள்
* மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதுதான்.
* செவ்வாய் கிரகத்தையும் தாண்டி விண்வெளியில் ஆய்வு செய்யும் தொழில்நுட்பத் திறமையை இந்தியா பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
* மங்கள்யான் விண்கலத்தின் மொத்த எடையே 15 கிலோதான். ஆனால் அதிநவீனமாக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
* மங்கள்யானில் மொத்தம் 5 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ஒரு கருவி மீத்தேன் இருக்கும் அளவை ஆராயும். 2–வது கருவி லைமன் ஆல்பா ஒளிமானி எனப்படும் போட்டோ மீட்டர் கருவியாகும். மேற்கண்ட இவை இரண்டும் செவ்வாய் கிரக காற்று மண்டல தகவல்களைத் தரும்.
* செவ்வாய் கிரகத்தின் மேற்புற படிமங்களை ஆய்வு செய்ய அதிநவீன கலர் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல சிறப்பு நிற கதிர்கள் பற்றி மற்றொரு கருவி ஆய்வு செய்யும். இவை தவிர செவ்வாய் புறக்காற்று மண்டலத்தை 5–வது கருவி ஆய்வு செய்யும்.
* செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக ஒரு ராக்கெட் தளம் அமைப்பதற்கான ஆய்வையும் மங்கள்யான் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். இதன் மூலம் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்தியாவால் விண்கலங்களை அனுப்ப முடியும்.
* மங்கள்யான் அனுப்பும் படங்களின் அடிப்படையில் விண்வெளி தொடர்பு முறைகளை விருத்தி செய்யவும் இந்திய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
* மங்கள்யான் இன்னும் 6 மாதங்களுக்கு செயல்படும் ஆற்றல் கொண்டது. இந்த 6 மாதங்களில் சுமார் 60 தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் விண்கலம் சுற்றி வரும்.
* மங்கள்யான் தனது 300 நாள் பயணத்தின்போது, வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஹெலன் புயலை மிகத் தெளிவாக படம் எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
* மங்கள்யான் தன் 4–வது சுற்றுப்பாதையை தொடங்கிய போது சிறிது எந்திரக் கோளாறு ஏற்பட்டது. சரியான நேரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்து விட்டதால் உடனடியாக அந்த எந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டது.
* மங்கள்யான் தன் பயணத்தின் 200–வது நாள் 42 கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தது. இது மொத்த பயண தூரத்தில் 60 சதவீதமாகும்.
* மங்கள்யானின் மொத்த பயண நாளான 325 நாட்களில் 4 தடவை பாதை மாற்றி விடப்பட்டது.
* செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் 3.2 நாட்களுக்கு ஒரு தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் சுற்றி வரும்.
* மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்று சேர மொத்தம் 250 கிலோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* செவ்வாய் கிரக ஆய்வில் மங்கள்யானின் பணி, அமெரிக்காவின் நாசா திட்டங்களையும் விட முதன்மையானதாக, வலுவுள்ளதாக, பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
* மங்கள்யான் அடுத்த 6 மாதங்களில் செயல்பட போவதை பெங்களூர் அருகே உள்ள பயலாலுவில் உள்ள இந்திய தொலைநிலை விண்வெளி கட்டுப்பாட்டு மையம் கண்காணிக்கும்.
On Thursday, September 25, 2014 by farook press in ,    
திருப்பூர்,செப்.25-
திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணிபட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 79 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள உற்பத்தி செய்யும் ரகங்களை கொமுதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து  வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக திகழும் காஞ்சிபுரம்,சேலம்,கோவை,ஆரணி,தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்று திகழ்கின்றன.வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்புகளை கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து நிலையங்களிலும் கடந்த 15.09.2014 முதக்ல், அடுத்த ஆண்டு 31.01.2015 வரை 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. திருப்பூர் மாநகராட்சி அலுவலக வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ்  குமரன் விற்பனை நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் விற்பனை மற்றும் தங்க மழை பரிசு திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.மேலும் புதிய வரவான மகாராணிபட்டுச் சேலையை கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கூறியதாவது:-
தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமலகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு பருத்தி சேலைகளில் போர்வைகள்,படுக்கை விரிப்புகள்,தலையணை உறைகள, வேஷ்டி, லுங்கி,துண்டு ரகங்கள ஆடவர்கள அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டில் புது முயற்சியாக மகாராணி பட்டுச் சேலைகளை தீபாவளி பண்டிகை விற்பனைக்கு அறிமுகபடுத்தபத்டுள்ளது.200 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆட்சி செய்த சாத்தூர், புதுக்கோட்டை,சின்னமனூர்,தலைவன் கோட்டை, போன்ற ஜமீன்களின் அரண்மணைகளுக்கு கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பு குழுவினர் நேரில் சென்று மன்னர்களின் ராணிகள்,இளவரசிகள் அணிந்த சேலைகளை சேகரித்து அவற்றை போலவே அச்சு அசலாக  வெண்பட்டில் சிறுமுகை, திருப்பூர் கணபதிபாளையம், கோயில் வழி ஆகிய நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கோ-ஆப்டெக்ஸ்மகாராணி பட்டுச் சேலைகள் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.  இந்த சேலைகள் ரூ.7 ஆயிரம் முதல், ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்த சேலைகளுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
14ம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த அதியா துறையாரு மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராணிகள் உடுத்திய சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் அவரது குடும்ப வாரிசுகளிடமிருந்து பிரத்தியகமாய் பெற்றுள்ளது.கடந்த ஆண்டு தீபாவளி 2013 ம் ஆண்டின் பொது கோவை மண்டலம் செய்த விற்பனை ரூ.1473.88 லட்சங்களாகும்.நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2014ம் ஆண்டிற்கு கோவை மண்டலத்திற்கு ரூ.2400.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2013 ஆண்டின் பொது கோ-ஆப்டெக்ஸ் திருப்பூர் குமரன் விற்பனை நிலையம் ரூ.49.71 லட்சம் விற்பனை செய்துள்ளது.நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2014 ஆண்டிற்கு ரூ.75.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கபத்டுள்ளது.மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் கடந்த ஆண்டு தீபாவளி 2013 ஆண்டின் போது 155.62 லட்சங்கள் ஆகும்.நடப்பு ஆண்டிற்கு திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.240.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது  அரசு பணியாளர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனக்களின் பணியாளர்களுக்கு கடன் வசதி அளிக்கப்படுகிறது.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கோரினார்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது,வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் து.சதாசிவம், தணிக்கை மேலாளர்  கோ.ராஜேந்திரன், துணை மண்டல மேலாளர் பி.ரவி, ரக மேலாளர் கே.ரவி, மக்கள் தொடர்பு மேலாளர் ஆர்.நடராஜன், கோ-ஆப்டெக்ஸ் திருப்பூர் குமரன் விற்பனை நிலைய மேலாளர் எஸ்.ஏ.தனபாலன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.