Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in , , ,    


பவானி, : பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நெசவாளர் தின விழா மற்றும் பேரவைக் கூட்டம் நேற்று பவானியில் நடைபெற்றது. தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் ராஜம்மாள், சீனிவாசன், பெரியமோளபாளையம் கிளைச் செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தனர். கிளைத் தலைவர் கோவிந்தன் கொடியேற்றினார். நிர்வாகக் குழு உறுப்பினர் வேலுசாமி வரவேற்றார். 
ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். காஞ்சிபுரம் பார்த்தசாரதி கைத்தறி பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.வி.சீனிவாசன் வாழ்த்துரையாற்றினார். 
கூட்டத்தில், 1994ல் நிர்ணயிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்களின் அடிப்படை ஊதியம் 20 ஆண்டுகளாகியும் மாற்றியமைக்கப்படவில்லை. இதனை மாற்றியமைத்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 5 பஞ்சப்படி உயர்வினை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்சக் கூலி சட்டத்துக்குட்பட்ட கைத்தறி நெசவுத்தொழிலுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் பஞ்சப்படி உயர்த்தப்பட வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும். காப்புரிமை பெற்ற பவானி கைத்தறி ஜமக்காளம் ரக ஒதுக்கீட்டு சட்டத்துக்கு விரோதமாக விசைத்தறியில் உற்பத்தி செய்வதையும், விற்பனையாவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடவது என முடிவு செய்யப்பட்டது. 
கைத்தறி அமலாக்க அதிகாரிகளே சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் காட்டி விசைத்தறி ஜமக்காள உற்பத்திக்கு துணை போகக் கூடாது. கூட்டுறவு சங்கங்களில் ஜமக்காளம் தேங்கியுள்ளதாகக் கூறி, நெசவாளர்களுக்கு நெய்வதற்கு நூல் கொடுக்காமல் உள்ளதைக் கைவிடுவதோடு, வாரம் முழுவதும் நெய்வதற்கு அனைத்து தறிகளுக்கும் நூல் வழங்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர்களின் ஓய்வூதியத்தை மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தனியாரிடம் நெசவு செய்யும் நெசவாளர்களில் 60 ஆண்டு நிறைவான நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளை களையும் நடவடிக்கையில் வசதியானவர்களை விட்டுவிட்டு, ஏழைகள் பலருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும். 
கைத்தறி நெசவாளர் பசுமை வீடு திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். தனியாரிடம் பணியாற்றும் நெசவாளர்களுக்கும் பசுமை வீடுகள் கட்டித் தர வேண்டும். பவானி பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் கட்டி அமைத்து, சாயத்தொழிலைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின.
சங்கச் செயலாளர் சித்தையன் ஆண்டறிக்கை வாசித்தார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சின்னசாமி, பொருளாளர் கோவிந்தன், உதவிச் செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் அல்லிமுத்து, மாது, பூபதி, ஆறுமுகம், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 comments: