Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோட்டில் வருகிற செப்டம்பர் 4–ந் தேதி முதல் 11–ந் தேதிவரை நடைபெறும் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமில் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
8 நாட்கள் ஆள்சேர்ப்பு
இந்திய ராணுவத்தில் சிப்பாய், சிப்பாய் பொதுப்பிரிவு, தொழில் நுட்ப பிரிவு, குமாஸ்தா உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான ஆள் சேர்ப்பு முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 4–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை 8 நாட்கள் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடக்கிறது. இதில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
அனைத்து பிரிவுக்கும் கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிப்பாய் பொதுப்பிரிவுக்கு 17 வயது முதல் 19 வயது வரையானவர்கள் கலந்து கொள்ளலாம். தொழில்நுட்பம், குமாஸ்தா பிரிவுகளுக்கு 17 வயது முதல் 23 வயது வரையானவர்கள் கலந்து கொள்ளலாம். இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஆள் சேர்க்கை முகாமுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. 11 மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்கள் தேர்வில் சிரமமின்றி கலந்து கொள்ளவும், முகாமுக்கு வரும் அதிகாரிகளுக்கான வசதிகள் செய்வது, தேர்வுக்கான இட வசதிகள் செய்வது குறித்து வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ், ஆர்.டி.ஓ. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோவையில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மைய அதிகாரி கர்னல் எச்.பிரவீன் தலைமையில் மேஜர் எம்.எஸ்.தோமர், சுபேதார் மேஜர் தர்ஷன்குமார் ஆகியோர் ஆள்சேர்ப்பு குறித்த விவரங்களை தெரிவித்தனர்.
கலெக்டர் வி.கே.சண்முகம் பேசும்போது, ‘குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதிகள் முறையாக செய்யப்பட வேண்டும். இதில் எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்’ என்று கூறினார். கூட்டத்தில் வருவாய்த்துறை, மாநகராட்சி, காவல்துறை, போக்குவரத்துத்துறை, உள்ளாட்சித்துறை உள்பட துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
தொடர்ந்து முகாம் நடைபெற உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தை கலெக்டர் வி.கே.சண்முகம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ஷாகுல் அமீது, துணைதாசில்தார் சிவகாமி, மாநகராட்சி உதவி ஆணையாளர் அசோக்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் அசோகன், பத்மாவதி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லட்சுமணசாமி, வெங்கடேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி முருகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 comments: