Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
5 மாவட்ட விவசாயிகள் சார்பில் ஜெயலலிதாவுக்கு மதுரையில் 22-ந் தேதி பாராட்டு விழாமதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை.

இந்த அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், அதை நிறைவேற்ற கேரள அரசு மறுத்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்தசுப்ரீம் கோர்ட்டு நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துமாறு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அதிகாரிகள் மேற்கொண்டனர். அணையின் நீர் மட்டம் உயர்த்தப்படுவதன் மூலம் மேற்கண்ட 5 மாவட்டங்களிலும் கூடுதல் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் வருகிற 22-ந் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை வருகிறார்.

பாராட்டு விழா நடத்துவதற்காக மதுரை ரிங் ரோட்டில் உள்ள மஸ்தான்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு நிலத்தை சுத்தம் செய்து பந்தல் அமைக்கும் பணியை தொடங்குவதற்கான பூமிபூஜை நேற்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. அப்போது பந்தல்கால் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், சுந்தர்ராஜன், ராஜேந்திர பாலாஜி, கோபாலகிருஷ்ணன் எம்.பி., மதுரை மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், முத்துராமலிங்கம், சாமி, தமிழரசன், கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பாராட்டு விழா குறித்து விவசாயிகள் சங்க தலைவர் மாணிக்கம் கூறுகையில், ‘‘பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிலைநாட்டி உள்ளார். பாராட்டு விழாவில் பங்கேற்க மதுரை வரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

பின்னர் மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இந்த பாராட்டு விழா பற்றி கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்போராட்டம், தொடர் போராட்டம் என உச்சநீதிமன்றம் வரை சென்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத்தந்து உள்ளார். இதற்காக தென்மாவட்ட மக்கள், தமிழக விவசாயிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் மூலம் குடிநீர் பெறும் பொதுமக்கள் சார்பாக வருகிற 22-ந் தேதி மதுரையில் முதல்-அமைச்சருக்கு மாபெரும் நன்றி மற்றும் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்