Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மடிக்கணினிகளை பயன்படுத்த வேண்டும்: செல்லூர்ராஜூ
மதுரை திருநகரில் உள்ள சவிதாபாய் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடை பெற்றது. விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளரான முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவேல் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டு றவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினியை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழ்நாட்டு மக்கள் எதற்கும் கை ஏந்த கூடாது என்பதற்காக தான் முதல்–அமைச்சர் அம்மா விலையில்லா திட்டங்களை அறிவித்து திறம்பட செயல்டுத்தி வருகிறார். மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக விளங்க வேண்டும் என்பதற்காக தான் விலையில்லா மடிக்கணினியை அம்மா வழங்கி வருகிறார்.
உத்திரபிரதேச முதல்வர் தேர்தல் நேரத்தில் தமிழக முதல்–அமைச்சர் அம்மாவை பாராட்டி அவரது பாணியில் உத்திர பிரதேசத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு செய்தார். அவர் வெற்றி பெற்ற பிறகு முதல்–அமைச்சர் அம்மாவை பின் பற்றி மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினியை வழங்கினார். ஆனால் அவரால் முழுமையாக வழங்கப்பட முடியவில்லை.
இதே வேளையில் தமிழ் நாடு முதல்–அமைச்சர் அம்மா முழுமையாக முழு வீச்சில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஆகவே இந்தியா மட்டு மல்லாது உலக நாடுகளே தமிழ்நாட்டை திரும்பி பார்க்கிறது. அம்மாவின் செயல்பாடுகளை பாராட்டுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.48 ஆயிரம் கோடியில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மாணவ செல்வங்கள் அரசின் உதவியை உணர்ந்து மடிக்கணினிகளை அறிவு வளர்த்துக்கொள்வதற்காக பயன்படுத்த வேண்டும். ஒழுக்கத்துடன், எதிர்காலத்தை நோக்கி தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கட்டுக் கோப்புடன் கட்டுப்பாடுடன் மடிக்கணினியை பயன் படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் முனியாண்டி, மாநகராட்சி கவுன்சிலர் முத்துக்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பாலமுருகன், பசுமலை பாலமுருகன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், அரசு வழக்கறிஞர் ரமேஷ், பேரவை துணைத் தலைவர் நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்