Wednesday, August 20, 2014

On Wednesday, August 20, 2014 by Unknown in ,    



திருப்பூர் ஆக 20:

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பூரில் 800 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இந்து முன்னணி சார்பில் திருப்பூர் தெற்குப் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இந்து முன்னணி அலுவலகத்தில் அதன் மாநிலப் பொதுச்செயலாளர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதற்கு, இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜெ.எஸ்.கிஷோர்குமார், தாமு ஜி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருப்பூரில் 800 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
  திருப்பூர் வடக்குப் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்த  ஆலோசனைக் கூட்டம் ஜெ.எஸ்.கிஷோர்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், திருவிளக்கு பூஜை, ஆன்மிகச் சொற்பொழிவு, அன்னதானம், மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 வரும் 31- ஆம் தேதி மாலை 4 மணியளவில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது. திருப்பூர், தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை அருகில் இருந்தும், மங்கலம் சாலை, கே.வி.ஆர். நகர் பகுதியில் இருந்தும், புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, ஆலாங்காடு பகுதியில் நிறைவு விழா நடைபெற உள்ளது.
  நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து தலைமை வகிக்க உள்ளார். காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் முன்னிலை வகிக்கிறார். பாஜக நாடாளுமன்ற செயலாளர் வி.சண்முகநாதன் சிறப்புரையாற்ற உள்ளார்.  இதையொட்டி, வரும் 21- ஆம் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாலை அணிந்து, காப்புக்கட்டி விரதத்தை தொடங்க உள்ளனர்.

0 comments: