Sunday, August 10, 2014

On Sunday, August 10, 2014 by Unknown in ,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தெற்கு கருங்குளத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (வயது 25). இவர் தன்னை போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி என கூறிக்கொண்டு ஊரில் உலா வந்துள்ளார். மேலும் காற்றாலை காவலாளிகளை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ராதாபுரம் போலீசார் நேற்று சுபாஷ் சந்திர போசை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைதான சுபாஷ் கடந்த 2012 ம் ஆண்டுதான் வள்ளியூரில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்தார். படிக்கும்போதே தான் போலீஸ் வேலையில் சேரப்போகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் படிப்பை முடித்த சுபாஷ் ஐ.பி.எஸ். தேர்வு எழுதப்போவதாக கூறி மகாராஷ்டிராவுக்கு சென்றார்.
6 மாதம் கழித்து திரும்ப வந்த அவர் தான் ஐ.பி.எஸ். முடித்துவிட்டதாகவும், தன்னை மத்திய அரசு சூப்பர் கமாண்டர் பொறுப்பில் அதிகாரியாக நியமித்து உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் ‘சிங்கம்’ பட சூர்யா பாணியில் தன்னை ரகசியமாக உளவுபார்க்க அரசு நியமித்ததாக கூறியதோடு போலீஸ் அதிகாரிபோல பாவனைகள் செய்தும், உடை அணிந்தும் உலாவந்துள்ளார்.
இதனால் அப்பகுதியினர் அவரை உண்மையிலேயே போலீஸ் அதிகாரிதான் என நம்பியுள்ளனர். ராதாபுரம் அருகே உள்ள பெத்தரங்கபுரத்தில் சுபாசின் உறவினர் வீடு உள்ளது.அப்பகுதியில் ஒரு கோவில் விழாவின்போது அங்கு சுபாசின் உறவினருக்கும் மற்றொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு சென்ற சுபாஷ் தகராறில் ஈடுபட்டவரை தான் போலீஸ் உயர் அதிகாரி என கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
இந்த விவகாரம் அப்பகுதியில் முக்கிய பிரமுகரிடம் சென்றது. அவர் சுபாசை அழைத்து விசாரித்தார். அப்போது சுபாஷ் தன்னை மத்திய அரசு போலீஸ் அதிகாரியாக நியமித்ததற்கு ஆதாரம் உள்ளது என கூறி போலியான ஒரு கடிதத்தை காண்பித்துள்ளார். இதனால் அப்பகுதியினர் சுபாஷ் உண்மையிலேயே போலீஸ் அதிகாரி என நம்பிவிட்டனர்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட் சுபாஷ் இரவு நேரங்களில் வாகன ரோந்து சென்று அப்பகுதி காற்றாலை காவலாளிகளை மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக கூறிய அவர், யாராவது தன்னை எதிர்த்தால் சுட்டுவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது பைக்கில் ‘போலீஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாபுரம் போலீசார் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சுபாஷ் மட்டும் தனியாக பைக்கில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது நான் மத்திய அரசு போலீஸ் அதிகாரி, என்னை பற்றி கேட்க உங்களுக்கு உரிமையில்லை என கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரிடம் எதுவும் பேசாமல் அனுப்பிவிட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சுபாசின் நடவடிக்கைகள் மேலும் அதிகமானது.
சாதாரண நாட்களில் சாலையில் நின்று வாகனங்களில் செல்வோரை வழிமறித்து அதிகார தோரணையில் மிரட்டி வந்தார். தன்னந்தனியாக வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வந்தார். நேற்று சுபாஷ் ராதாபுரம் அருகே மகேந்திரபுரத்தில் வாகனங்களை மறித்து சோதனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சுபாசின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சுபாஷ் ஐ.பி.எஸ் அதிகாரி போல நடித்து மோசடியில் செய்த குட்டு அம்பலமானது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சுபாசின் சொந்த ஊரான தெற்கு கருங்குளம் பழவூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது. சுபாசை போலீசார் கைது செய்த விவரத்தை பழவூர் போலீசுக்கு தெரியப்படுத்தினர்.
இதை தொடர்ந்து பழவூர் போலீசார் தெற்கு கருங்குளத்தில் உள்ள சுபாசின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் சுபாஷ் வைத்திருந்த போலி ஆவணம் மற்றும் போலீஸ் உடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.