Showing posts with label Tirunelveli. Show all posts
Showing posts with label Tirunelveli. Show all posts

Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகன் சிவசுப்பிரமணியன்(15) அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லாததை அடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் 10ம் வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் கற்று கொடுத்து வந்துள்ளார். நாளடைவில் அவர்களுக்குள்  நெருக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 31ம் தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் வங்கி ஏ.டி.எம்.கார்டு உள்ளிட்டவைகளை எடுத்து சென்றதும் தெரியவந்தது.
இருவரும் எங்கு சென்றார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவன் சிவசுப்பிரமணியன் நேற்று சென்னை கும்மிடிபூண்டியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் சிவசுப்பிரமணியனும் ஆசிரியை கோதைலட்சுமியும் சென்னை கும்மிடிபூண்டியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து அவர்களை தேடி  கடையநல்லூர் போலீசார் சென்னை வந்துள்ளனர்.

Friday, November 14, 2014

On Friday, November 14, 2014 by Unknown in ,    
நெல்லையில் அரசு பஸ்–லாரி மோதல்: 12 பயணிகள் காயம்
கோவையில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தென்காசியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் ஓட்டினார். நெல்லையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மதுரை நோக்கி சென்றது.
லாரியை அய்யாதுரை என்பவர் ஓட்டி சென்றார். பஸ் இன்று காலை நெல்லை தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் வந்தது. இந்த வேளையில் எதிரே முன்னால் சென்ற ஒரு காரை லாரி முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், பஸ்சும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் அரசு பஸ் அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது. இதில் பஸ்சின் முன்பகுதியும், லாரியின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் பஸ்சில் வந்த நாரைகிணறு ரவி (38), வள்ளியூர் பாலபிரியா (21), ஆலங்குளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மல்லிகா(40), 4 வயது குழந்தை தவமணி, சீதாலட்சுமி(32), லாரி டிரைவர் அய்யாதுரை ஆகியோர் உள்பட 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தச்சநல்லூர் போலீசார் மற்றும் நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்து பற்றி விபத்து தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் போது அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

Thursday, November 13, 2014

On Thursday, November 13, 2014 by Unknown in ,    
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கரந்தானேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்சாமி (வயது 30), கட்டிட தொழிலாளி. இவரும் அருகில் உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் கணேசன் (33) என்பவரும் நேற்று வேலைக்கு சென்றனர். இரவு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார்கள்.
பாணான்குளம் ரெயில்வே கேட் அருகே வந்த போது ரோட்டோரம் பதுங்கியிருந்த கும்பல் திடீர் என்று அவர்களை வழிமறித்தது. கையில் வைத்திருந்த அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் 2 பேரையும் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த வேல்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேசன் பலத்த காயமடைந்தார்.
ஆத்திரம் தீராத அந்த கும்பல் சிறிது தூரம் கொலை வெறியுடன் ஓடியது. அப்போது அந்த வழியே அதே பகுதியை சேர்ந்த மாரிக்கனி (37) சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரையும் வழிமறித்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து தலையை துண்டித்தது. பின்னர் தலையை அந்த பகுதியில் வீசி விட்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து காயமடைந்த கணேசனை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேல்சாமி உடலை கைப்பற்றினர். பின்னர் சிறிது தொலைவில் கிடந்த மாரிக்கனியின் தலையில்லா உடலையும் போலீசார் மீட்டனர். நள்ளிரவில் துண்டிக்கப்பட்ட தலையை அப்பகுதியில் தேடினர். இன்று காலை அப்பகுதியில் உள்ள புதரில் தலை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் பதட்டத்தை உண்டாக்கியது. சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். முன்விரோதம் காரணமாக அருகில் உள்ள பாணான்குளத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 21–9–2014 அன்று பாணான்குளத்தை சேர்ந்த 2 பேர் கரந்தானேரிக்கு டி.வி. ரிப்பேர் பார்க்க சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார்களாம். இதை கரந்தானேரியை சேர்ந்த சிலர் கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது பற்றி நாங்குநேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். பின்பு சிலரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
இது தொடர்பான முன்விரோதத்திலேயே தற்போது 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் மாரிக்கனியின் சொந்த ஊர் மதுரை. இவரது தாய் ஊர் கரந்தானேரி என்பதால் அங்கேயே திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கொலை செய்யப்பட்டவர்கள், கொலையாளிகள் இரு தரப்பினரும் வேறு வேறு பிரிவினர் என்பதால் அப்பகுதியில் பதட்டம் உண்டாகியுள்ளது. இதையடுத்து கரந்தானேரி,பாணான்குளத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியார் ஈ.வெ.ரா 136-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், பிரபாகரன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதா கே.பரமசிவன், துணை மேயர் ஜெகநாதன், பொருளாளர் கணேசராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் சரவணன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் அரிகரசிவசங்கர், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகபூப்ஜான், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், நகர கூட்டுறவு சங்க தலைவர் டால் சரவணன், மேயராக தேர்வு செய்யப்பட்டு உள்ள புவனேசுவரி, மகளிர் அணி வெண்ணிலா ஜீவபாரதி, கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, பேபி சுந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

தி.மு.க.-ம.தி.மு.க.

தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர அமைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் பெரியார் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிர்வாகிகள் நமசிவாயம் என்ற கோபி, பூக்கடை அண்ணாத்துரை, பொதுக்குழு வின்சர், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருள்வின் ரொட்ரிகோ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஜெயின் உசேன், மணப்படை மணி, சுதர்சன், விஜயகுமார், கா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் இரா.காசி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநகர தலைவர் ரத்தினசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ம.க-விடுதலை சிறுத்தைகள்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் வியனரசு தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரவிதேவேந்திரன், சக்தி, தமிழர் தேசிய முன்னணி தமிழ்ஈழன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் அமுதா மதியழகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக், மாநகர் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கிங் தேவேந்திரன், பொட்டல் கண்ணன், பெருமாள் பாண்டியன், முத்துப்பாண்டியன், பழனி மாரியப்பன், முத்து, முருகையா பாண்டியன், தினேஷ், முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

அருந்தமிழர் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 32). அவருடைய மனைவி சுதா ராஜேசுவரி (27). இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சுதா ராஜேசுவரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுதா ராஜேசுவரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுதா ராஜேசுவரி, குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
எனக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தது, மனித உரிமை மீறல் ஆகும். அதுபற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவேன்“ என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.

உதயகுமாருக்கு அனுமதி மறுப்பு

நேபாள தலைநகர் காட்மாண்டுவில், மனித உரிமை மீறல் குறித்த மாநாடு நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து காட்மாண்டு செல்ல இருந்தார். ஆனால், அவர் வெளிநாடு செல்ல டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

“உரிய உத்தரவு இன்றி இனி வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டாம்“ என்று அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தியதாக தெரியவருகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் போராட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி உதயகுமாரிடம் ‘தினத்தந்தி‘ நிருபர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

பாஸ்போர்ட் முடக்கம்

“ஒவ்வொரு நாட்டுக்கும் ஐ.நா.சபை பிரதிநிதிகள் சுதந்திரமாக சென்று, அந்த நாடுகளில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், இந்தியாவுக்குள் ஐ.நா. சபை பிரதிநிதிகள் வருவதற்கு விசா வழங்கப்படுவது இல்லை. இதனால்தான் இந்தியாவில் நடைபெற இருந்த மனித உரிமைகள் குறித்த மாநாடு, நேபாள தலைநகர் காட்மாண்டுவுக்கு மாற்றப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபைன் உள்ளிட்டோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், கூடங்குளம் பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பேசலாம் என்று அங்கு புறப்பட்டேன்.

டெல்லி விமான நிலையத்துக்கு மதியம் 1.30 மணி அளவில் சென்றடைந்தேன். பிற்பகல் 3 மணிக்கு காட்மாண்டுவுக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நேபாளம் செல்ல வேண்டும் என்றால், இந்திய அரசின் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதுமானது. எனவே வாக்காளர் அட்டையை காண்பித்தேன்.

விமானம் சென்றுவிட்டது

நான் கூடங்குளம் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்ததால், என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள். துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். என் மீது கூடங்குளம் போலீசில் 350 வழக்குகள் இருப்பதால், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே காட்மாண்டு செல்ல அனுமதிப்போம் என்று கூறினார்கள்.

நெல்லை சூப்பிரண்டிடம் போனில் பேசினார்கள். ஆனால், அனுமதி கொடுப்பது பற்றி, மேல் அதிகாரிகளிடம் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறி இருக்கிறார். இடையில் என்ªன்னவோ நடந்தது. நான் செல்ல வேண்டிய விமானமும் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

5½ மணி நேரம் விசாரணை

அதன்பின்பும் என்னை விடவில்லை. மாவோயிஸ்டுகள் பற்றி என்னிடம் கேட்டார்கள். தீவிரவாதத்தில் நம்பிக்கை இருக்கிறதா? என்றெல்லாம் விசாரித்தார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் துருவித்துருவி விசாரித்தார்களே தவிர, நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். பகல் 1.30 மணி அளவில் தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. இனிமேல் வெளிநாடு செல்ல முயற்சிக்க கூடாது, என்று அறிவுறுத்தி விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைத்தார்கள்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தனி மனிதனின் உரிமைக்கு எதிரானது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு யார்-யாரெல்லாமோ? வருகிறார்கள். ஆனால், ஐ.நா.சபை பிரதிநிதிகள் வரக்கூடாதா? இதுதான் இந்தியாவின் ஜனநாயகமா?

வழக்கு தொடருவேன்

எனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். எனது பாஸ்போர்ட்டை திரும்ப தர வேண்டும். என் மீது போடப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழக அரசு கைவிட வேண்டும்.

இல்லை என்றால் என் மீதான வழக்கை நடத்தி, குற்றம் இருந்தால் தண்டனை கொடுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் எனது பாஸ்போர்டை திரும்பத் தாருங்கள் என்று கோரியும், சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன்“

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by Unknown in ,    



தமிழக பா.ஜ.க.வின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
 
தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் மன பலத்துக்கும், பண பலத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தலாகும். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மிரட்டப்படுவதும், கடத்தப்படுவதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினரை போல் பேசுகிறார்கள்.
 
தற்போது நடைபெறும் இந்த தேர்தல் தேவையில்லாத ஒன்றாகும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.
 
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜ.க. போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு முழுமையாக எங்களுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் தேர்தலில் ஒதுங்கியிருக்கும் மற்றும் புறக்கணித்திருக்கும் கட்சிகளும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
 
அமைச்சர்கள் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என கோவையில் முகாமிட்டுள்ளனர். பிரச்சாரத்துக்கு குவிந்துள்ள அமைச்சர்கள் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க இதேபோல் வந்திருந்தால் அவர்களை வரவேற்றிருப்போம்.
 
கோவை பா.ஜ.க. வேட்பாளர் நல்ல திறமையானவர். அவரை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்தால் கோவை மாநகரை சிறந்த நகரமாக உருவாக்க பாடுபடுவார்.
 
குஜராத் மாநிலம் போல் கோவை மாநகரை சிறந்த நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுப்பார். இதை உணர்ந்து மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழக மீனவர் பிரச்சனையில் தமிழக பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
நெல்லை, செப்.13–
நெல்லை டவுன் கண்டியப்பேரி அருகே உள்ள சங்குமுத்தம்மாள்புரத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த தோட்டம் பேட்டை போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்டது கிடையாது என்பதால், சம்பவ இடத்திற்கு மானூர் போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாபயிர்களை அழித்தனர். அதனை பயிரிட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Saturday, September 13, 2014 by farook press in ,    
நெல்லை,செப்.13–
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு சாட்டுப்பத்து வழியாக பாபநாசம் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். டயர் வெடித்ததால் பஸ் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதனால் மேலும் பயணிகள் பீதியடைந்தனர். எனினும் அரசு பஸ் டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டி பஸ்சை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
டிரைவரின் இந்த நடவடிக்கையால் பஸ்சில் இருந்த 50–க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக பயணிகள் கூறுகையில், சமீபகாலமாக அரசு பஸ்களில் பயணம் செய்தால் எங்காவது பழுதாகி நின்று விடுகிறது. இதுபோன்று டயர்கள் வெடிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே தினமும் பஸ்கள் புறப்படும் முன்பு அதில் உள்ள பழுதுகளை நீக்கி விபத்தில்லாமல் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.

On Saturday, September 13, 2014 by Unknown in ,    

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாங்குநேரியில் ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவில் மடாதிபதியை நெற்றியில் விபூதியுடன் சென்று கமல் சந்தித்தார்.
அந்த கோவிலுக்கு உள்ளே ஆண்கள் செல்லும்போது மேலாடை அணிந்து செல்லக்கூடாது. வேட்டி மட்டும் தான் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் அணிந்து செல்லவும் தடை இருக்கிறது. இது காலங்காலமாக அந்த கோவிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கமல் அந்த மரபை மீறி மேலாடை அணிந்து சென்றார் என்று நெல்லை மாவட்ட மக்கள் கோவில் நிர்வாகத்தின் மீதும், கமல் மீதும் கடும் கொந்தளிப்பை உண்டாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குதொடரப்போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சரி… அது இருக்கட்டும்… இதுவரை கடவுளே இல்லையென்று சொல்லிவந்த கமலஹாசன், சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களுக்கு அவரே பூஜை போட்டார். பட பூஜை மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டிருப்பார் என அது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. தற்பொழுது கமல் நெற்றியில் விபூதியுடனும்,  கையில் தட்சனையுடனும் கோயில் மடாதிபதியை சந்தித்து அருள்வாக்கு பெற்றதான் காரணம் என்ன.
ஒரு வேலை நாத்திகம் போரடித்ததால், ஆன்மீகத்திற்கு திரும்பிவிட்டாரா? அல்லது தான் ஒரு நாத்திகவாதி என இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளாரா? கமல்ஹாசனின் உண்மை முகம் எது எனவும் பொதுமக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    



நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்ளி அன்று இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா செய்தியாளர்களிடம் தகவல் அளித்துள்ளார். தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிடில் விநாயகர் சிலைகள் ஞாயிறன்று கரைக்கப்படமாட்டாது என மிரட்டல் விடுத்துள்ளார்.  

Sunday, August 10, 2014

On Sunday, August 10, 2014 by Unknown in ,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தெற்கு கருங்குளத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (வயது 25). இவர் தன்னை போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி என கூறிக்கொண்டு ஊரில் உலா வந்துள்ளார். மேலும் காற்றாலை காவலாளிகளை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ராதாபுரம் போலீசார் நேற்று சுபாஷ் சந்திர போசை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைதான சுபாஷ் கடந்த 2012 ம் ஆண்டுதான் வள்ளியூரில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்தார். படிக்கும்போதே தான் போலீஸ் வேலையில் சேரப்போகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் படிப்பை முடித்த சுபாஷ் ஐ.பி.எஸ். தேர்வு எழுதப்போவதாக கூறி மகாராஷ்டிராவுக்கு சென்றார்.
6 மாதம் கழித்து திரும்ப வந்த அவர் தான் ஐ.பி.எஸ். முடித்துவிட்டதாகவும், தன்னை மத்திய அரசு சூப்பர் கமாண்டர் பொறுப்பில் அதிகாரியாக நியமித்து உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் ‘சிங்கம்’ பட சூர்யா பாணியில் தன்னை ரகசியமாக உளவுபார்க்க அரசு நியமித்ததாக கூறியதோடு போலீஸ் அதிகாரிபோல பாவனைகள் செய்தும், உடை அணிந்தும் உலாவந்துள்ளார்.
இதனால் அப்பகுதியினர் அவரை உண்மையிலேயே போலீஸ் அதிகாரிதான் என நம்பியுள்ளனர். ராதாபுரம் அருகே உள்ள பெத்தரங்கபுரத்தில் சுபாசின் உறவினர் வீடு உள்ளது.அப்பகுதியில் ஒரு கோவில் விழாவின்போது அங்கு சுபாசின் உறவினருக்கும் மற்றொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு சென்ற சுபாஷ் தகராறில் ஈடுபட்டவரை தான் போலீஸ் உயர் அதிகாரி என கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
இந்த விவகாரம் அப்பகுதியில் முக்கிய பிரமுகரிடம் சென்றது. அவர் சுபாசை அழைத்து விசாரித்தார். அப்போது சுபாஷ் தன்னை மத்திய அரசு போலீஸ் அதிகாரியாக நியமித்ததற்கு ஆதாரம் உள்ளது என கூறி போலியான ஒரு கடிதத்தை காண்பித்துள்ளார். இதனால் அப்பகுதியினர் சுபாஷ் உண்மையிலேயே போலீஸ் அதிகாரி என நம்பிவிட்டனர்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட் சுபாஷ் இரவு நேரங்களில் வாகன ரோந்து சென்று அப்பகுதி காற்றாலை காவலாளிகளை மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக கூறிய அவர், யாராவது தன்னை எதிர்த்தால் சுட்டுவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது பைக்கில் ‘போலீஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாபுரம் போலீசார் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சுபாஷ் மட்டும் தனியாக பைக்கில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது நான் மத்திய அரசு போலீஸ் அதிகாரி, என்னை பற்றி கேட்க உங்களுக்கு உரிமையில்லை என கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரிடம் எதுவும் பேசாமல் அனுப்பிவிட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சுபாசின் நடவடிக்கைகள் மேலும் அதிகமானது.
சாதாரண நாட்களில் சாலையில் நின்று வாகனங்களில் செல்வோரை வழிமறித்து அதிகார தோரணையில் மிரட்டி வந்தார். தன்னந்தனியாக வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வந்தார். நேற்று சுபாஷ் ராதாபுரம் அருகே மகேந்திரபுரத்தில் வாகனங்களை மறித்து சோதனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சுபாசின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சுபாஷ் ஐ.பி.எஸ் அதிகாரி போல நடித்து மோசடியில் செய்த குட்டு அம்பலமானது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சுபாசின் சொந்த ஊரான தெற்கு கருங்குளம் பழவூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது. சுபாசை போலீசார் கைது செய்த விவரத்தை பழவூர் போலீசுக்கு தெரியப்படுத்தினர்.
இதை தொடர்ந்து பழவூர் போலீசார் தெற்கு கருங்குளத்தில் உள்ள சுபாசின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் சுபாஷ் வைத்திருந்த போலி ஆவணம் மற்றும் போலீஸ் உடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in ,    
வாசுதேவநல்லூரில் பராமரிப்பின்றி மூடி கிடக்கும் பேரூராட்சி பூங்கா

வாசுதேவநல்லூர் பேரூராட்சியின் சார்பில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே டவுண் பஞ்சாயத்து சார்பில் 2009–ல் அமைக்கப்பட்டது. பூங்கா சுமார் ரூ.30 லட்சம் செலவில் நடைமேடை, ஊஞ்சல், செயற்கை நீர்ஊற்று, பூங்கா, நீர் அருவி ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
இதனை பராமரிப்பதற்காக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த பூங்காவில் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல வகைகளில் பயன்படுத்தி வந்தனர். தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாவினர் இங்கு வந்து புகைப்படம் எடுத்தும் அனுபவித்து வந்தனர்.
மேலும் நடைமேடை அமைக்கப்பட்டு இருந்ததால் அனைவரும் நடைபயிற்சி செய்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு இங்கு பணியாற்றிய காவலர் திடீரென்று இறந்து விட்டார். அன்றிலிருந்து பூங்காவினை பராமரிக்கப்படாததால் இங்கு அமைக்கப்பட்டிருந்த பூஞ்செடிகள், புல்வெளிகள் மற்றும் அழகு செடிகள் அனைத்தும் தண்ணீர் ஊற்றப்படாததால் கருகி போய்விட்டது.
செயற்கை நீர்ஊற்று உள்பட அனைத்தும் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இதனை சரி செய்து பராமரிப்பு பணிகளை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் டவுண் பஞ்சாயத்து தலைவரும், மகாத்மாகாந்தி சேவா சங்கத்தின் தலைவர் தவமணி கூறியதாவது


பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வந்த பேரூராட்சி பூங்காவினை சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் அவை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாக சீர்கேடுகளினால் இதனை செயல்படுத்த முடியாமல் பராமரிப்பு பணிகளை செய்து தருவதற்கு தனியார் நிறுவனங்கள் சேவை நோக்கத்தோடு செய்து தர முன் வருகிறது. அவர்களிடம் ஒப்படைத்தால் சிறப்பாக செய்து தருவதற்கு தயாராக இருக்கின்றனர். அதற்கான அனுமதியினை வழங்கினால் புதிய தோற்றத்துடன் அனைவரும் பயன்படுத்தும் வண்ணமாக பூங்கா மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.