Thursday, November 13, 2014

On Thursday, November 13, 2014 by Unknown in ,    
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கரந்தானேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்சாமி (வயது 30), கட்டிட தொழிலாளி. இவரும் அருகில் உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் கணேசன் (33) என்பவரும் நேற்று வேலைக்கு சென்றனர். இரவு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார்கள்.
பாணான்குளம் ரெயில்வே கேட் அருகே வந்த போது ரோட்டோரம் பதுங்கியிருந்த கும்பல் திடீர் என்று அவர்களை வழிமறித்தது. கையில் வைத்திருந்த அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் 2 பேரையும் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த வேல்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேசன் பலத்த காயமடைந்தார்.
ஆத்திரம் தீராத அந்த கும்பல் சிறிது தூரம் கொலை வெறியுடன் ஓடியது. அப்போது அந்த வழியே அதே பகுதியை சேர்ந்த மாரிக்கனி (37) சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரையும் வழிமறித்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து தலையை துண்டித்தது. பின்னர் தலையை அந்த பகுதியில் வீசி விட்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து காயமடைந்த கணேசனை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேல்சாமி உடலை கைப்பற்றினர். பின்னர் சிறிது தொலைவில் கிடந்த மாரிக்கனியின் தலையில்லா உடலையும் போலீசார் மீட்டனர். நள்ளிரவில் துண்டிக்கப்பட்ட தலையை அப்பகுதியில் தேடினர். இன்று காலை அப்பகுதியில் உள்ள புதரில் தலை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் பதட்டத்தை உண்டாக்கியது. சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். முன்விரோதம் காரணமாக அருகில் உள்ள பாணான்குளத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 21–9–2014 அன்று பாணான்குளத்தை சேர்ந்த 2 பேர் கரந்தானேரிக்கு டி.வி. ரிப்பேர் பார்க்க சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார்களாம். இதை கரந்தானேரியை சேர்ந்த சிலர் கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது பற்றி நாங்குநேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். பின்பு சிலரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
இது தொடர்பான முன்விரோதத்திலேயே தற்போது 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் மாரிக்கனியின் சொந்த ஊர் மதுரை. இவரது தாய் ஊர் கரந்தானேரி என்பதால் அங்கேயே திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கொலை செய்யப்பட்டவர்கள், கொலையாளிகள் இரு தரப்பினரும் வேறு வேறு பிரிவினர் என்பதால் அப்பகுதியில் பதட்டம் உண்டாகியுள்ளது. இதையடுத்து கரந்தானேரி,பாணான்குளத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: