Thursday, November 13, 2014

On Thursday, November 13, 2014 by Unknown in ,    
சாத்தான்குளம் அருகே துப்பாக்கி சூடு: மனைவி–மாமியாரை சுட்டது ஏன்? கைதான வாலிபர் வாக்குமூலம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சோலையார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அதிசயமணி. இவரது மகன் ஜெப்ரிபான் (வயது 24). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜெப்ரிபானும் அதே பகுதியை சேர்ந்த ஜெனிபர் (24) என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.  
திருமணமான பின்பு ஜெப்ரிபான் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜெனிபர் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் இரவு ஜெனிபர் மற்றும் அவரது தாய் ராஜபரிமளம் ஆகியோரை ஜெப்ரிபான் துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த 2 பேரும் பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெப்ரிபானை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கைதான ஜெப்ரிபான் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடும் எதிர்ப்பை மீறி நான் ஜெனிபரை காதல் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கும் எனது மனைவிக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் ஏற்படும். அப்போதெல்லாம் ஜெனிபர் என்னிடம் கோபித்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார். அந்த சமயங்களில் நான் ஜெனிபர் வீட்டிற்கு சென்று அவளை அழைத்தேன். ஆனால் ஜெனிபரின் பெற்றோர் என்னுடன் அனுப்ப மறுத்தனர். இது போன்று பல முறை இந்த சம்பவங்கள் நடந்துள்ளது.
கடந்த வாரமும் எனது மனைவி என்னிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நான் பல முறை சென்று அவளை அழைத்தேன். ஆனால் வரவில்லை. அவளது பெற்றோரும் அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நான் சம்பவத்தன்று இரவு எனது சகோதரர் பயிற்சி பெறுவதற்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு மாமனார் வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்த மனைவி, மாமியாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டேன். வெளியூருக்கு தப்பிசெல்ல இருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: