Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
எனக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தது, மனித உரிமை மீறல் ஆகும். அதுபற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவேன்“ என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.

உதயகுமாருக்கு அனுமதி மறுப்பு

நேபாள தலைநகர் காட்மாண்டுவில், மனித உரிமை மீறல் குறித்த மாநாடு நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து காட்மாண்டு செல்ல இருந்தார். ஆனால், அவர் வெளிநாடு செல்ல டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

“உரிய உத்தரவு இன்றி இனி வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டாம்“ என்று அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தியதாக தெரியவருகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் போராட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி உதயகுமாரிடம் ‘தினத்தந்தி‘ நிருபர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

பாஸ்போர்ட் முடக்கம்

“ஒவ்வொரு நாட்டுக்கும் ஐ.நா.சபை பிரதிநிதிகள் சுதந்திரமாக சென்று, அந்த நாடுகளில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், இந்தியாவுக்குள் ஐ.நா. சபை பிரதிநிதிகள் வருவதற்கு விசா வழங்கப்படுவது இல்லை. இதனால்தான் இந்தியாவில் நடைபெற இருந்த மனித உரிமைகள் குறித்த மாநாடு, நேபாள தலைநகர் காட்மாண்டுவுக்கு மாற்றப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபைன் உள்ளிட்டோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், கூடங்குளம் பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பேசலாம் என்று அங்கு புறப்பட்டேன்.

டெல்லி விமான நிலையத்துக்கு மதியம் 1.30 மணி அளவில் சென்றடைந்தேன். பிற்பகல் 3 மணிக்கு காட்மாண்டுவுக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நேபாளம் செல்ல வேண்டும் என்றால், இந்திய அரசின் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதுமானது. எனவே வாக்காளர் அட்டையை காண்பித்தேன்.

விமானம் சென்றுவிட்டது

நான் கூடங்குளம் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்ததால், என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள். துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். என் மீது கூடங்குளம் போலீசில் 350 வழக்குகள் இருப்பதால், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே காட்மாண்டு செல்ல அனுமதிப்போம் என்று கூறினார்கள்.

நெல்லை சூப்பிரண்டிடம் போனில் பேசினார்கள். ஆனால், அனுமதி கொடுப்பது பற்றி, மேல் அதிகாரிகளிடம் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறி இருக்கிறார். இடையில் என்ªன்னவோ நடந்தது. நான் செல்ல வேண்டிய விமானமும் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

5½ மணி நேரம் விசாரணை

அதன்பின்பும் என்னை விடவில்லை. மாவோயிஸ்டுகள் பற்றி என்னிடம் கேட்டார்கள். தீவிரவாதத்தில் நம்பிக்கை இருக்கிறதா? என்றெல்லாம் விசாரித்தார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் துருவித்துருவி விசாரித்தார்களே தவிர, நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். பகல் 1.30 மணி அளவில் தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. இனிமேல் வெளிநாடு செல்ல முயற்சிக்க கூடாது, என்று அறிவுறுத்தி விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைத்தார்கள்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தனி மனிதனின் உரிமைக்கு எதிரானது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு யார்-யாரெல்லாமோ? வருகிறார்கள். ஆனால், ஐ.நா.சபை பிரதிநிதிகள் வரக்கூடாதா? இதுதான் இந்தியாவின் ஜனநாயகமா?

வழக்கு தொடருவேன்

எனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். எனது பாஸ்போர்ட்டை திரும்ப தர வேண்டும். என் மீது போடப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழக அரசு கைவிட வேண்டும்.

இல்லை என்றால் என் மீதான வழக்கை நடத்தி, குற்றம் இருந்தால் தண்டனை கொடுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் எனது பாஸ்போர்டை திரும்பத் தாருங்கள் என்று கோரியும், சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன்“

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

0 comments: