Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    






பல்பு தயாரிக்கும் இயந்திரங்களை விலைக்கு விற்று, அதை வாங்கிய நபர்களிடம் இருந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்புகளை பெற்றுக்கொண்டு, பணம் தராமல் மோசடி செய்த வழக்கில் 2 பேர் தலைமறைவான நிலையில், அதில் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 உடுமலை, பெதப்பம்பட்டி அருகே சோமவாரப்பட்டியைச் சேர்ந்தவர் டி.வெள்ளியங்கிரி(32). இவருடன், அதே ஊரில் வசித்து வந்த சூர்யபாபு என்பவர் அறிமுகமாகி, தான் பல்பு தயாரிக்கும் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலமாக நல்ல லாபம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், பல்பு தயாரிக்கும் இயந்திரம், தயாரிக்கும் முறை குறித்து வெள்ளியங்கிரியை அழைத்துச் சென்று நேரில் சூர்யபாபு விளக்கியுள்ளார்.
 இதையடுத்து, வெள்ளியங்கிரி, பல்பு தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்குவதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டில் சூர்யபாபு மூலமாக தில்லியைச் சேர்ந்த ராஜ்கபூர் என்பவரின் நிறுவனத்தின் பெயருக்கு பல தவணைகளாக மொத்தம் ரூ. 3.63 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலமாக அனுப்பி வைத்தார். அதன்பின், இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மூலமாக பல்பு உற்பத்தி செய்த வெள்ளியங்கிரி, ரூ. 4.73 லட்சம் மதிப்பிலான பல்புகளை சூர்யபாபு மூலமாக தில்லியில் உள்ள ராஜ்கபூர் நிறுவனத்திற்கு 5 தவணைகளாக அனுப்பி வைத்தார்.
 அதற்கான தொகை ரூ. 4.73 லட்சம் தர வேண்டிய நிலையில், வெள்ளியங்கிரிக்கு ரூ. 50,000 மட்டும் அந்நிறுவனம் கொடுத்தது. மீதித் தொகையை அந்நிறுவனம் தரவில்லை. இந்நிலையில், சோமவாரப்பட்டியில் வசித்து வந்த சூர்யபாபு தலைமறைவானார்.
  இந்நிலையில், உடுமலை, திருப்பூர், மூலனூர் பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் இதேபோன்று சூர்யபாபுவும், ராஜ்கபூரும் சேர்ந்து மோசடி செய்துள்ளதாக வெள்ளியங்கிரிக்கு தெரியவந்தது.
இந்நிலையில், திருப்பூர் அருகே ஐயன்தோட்டம் பாபுஜி நகரில் முத்துராமன் என்பவரின் நிறுவனத்தில் சூர்யபாபு இருப்பதாக தகவல் கிடைத்து, பாதிக்கப்பட்ட வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் அங்கு சென்று சூர்யபாபுவை பிடித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம்
ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து, சூர்யபாபுவை கைது செய்தனர். தலைமறைவான ராஜ்கபூரை தேடிவருகின்றனர்.

0 comments: