Wednesday, August 13, 2014

On Wednesday, August 13, 2014 by Unknown in ,
கைத்தறி ரகங்களை, விசைத்தறி உள்ளிட்ட வேறு தறிகளில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து கைத்தறி சட்டம் (1985) உதவி அமலாக்க அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி: நாட்டின் பாரம்பரியமிக்க தொழிலான கைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு, விசைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளால் சந்தையில் ஏற்படும் விற்பனைப் போட்டியைத் தவிர்ப்பதற்கு இச் சட்டம் வழிவகை செய்கிறது. இதன்படி, கைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்யக் கூடிய சில ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பருத்தி பட்டு வேஷ்டி, பருத்தி பட்டு சேலை, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், டிரஸ் மெட்டீரியல், கம்பளி, ஷால் மஃப்ளர், உல்லன் டுவீட், பாவாடை, தாவணி ஆகிய ரகங்களை கைத்தறி அல்லாத வேறு எந்த வகையான தறியிலும் உற்பத்தி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
 இதை மீறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு தறிக்கும் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் மேற்படி ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சட்டவிதிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம், கைத்தறி சட்டம் 1986, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.