Tuesday, August 19, 2014

On Tuesday, August 19, 2014 by farook press in ,    
அமராவதி அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: நெல் சாகுபடி தீவிரம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாயிலும், 7–ந் தேதி முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் கனியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான வழிபாட்டுதல்கள் மற்றும் விதைகள், உரங்கள், இடுபொருட்கள் வழங்கும் பணியில் மடத்துக்குளம் வேளாண்மை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மை அதிகாரி கூறியதாவது:–
தற்போது அமராவதி அணையில் இருந்து 120 நாட்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு தகுந்தபடி பயிர் ரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே மத்திய ரக நெல் பயிர்களான ஏஎஸ்டி–16, ஏடிடி–39, ஏடிடி–45 ஆகிய ரகங்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 15–ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குகிறது. அது பூக்கள் பால் பிடிக்கும் தருணம் என்பதால் பயிர்களுக்கு இடப்படும் உரங்களின் யூரியாவின் அளவினை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தவும்.
பயிர்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும், சத்தினையும் வழங்கக்கூடிய பொட்டாஷ் உரங்களை அடி உரமாக பயன்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது ஏடிடி–39, ஏடிடி–45 நெல் விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. மேலும் தேவையான அளவு உயிர் உரங்கள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: