Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஊத்துக்குளி தாலுகாவில் சாயகழிவு நீரால் தரிசான 10 ஏக்கர் நிலத்தை சீரமைத்து அதில் தென்னை நாற்றுகளை வேளாண்மைத்துறையினர் நடவு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
சாயகழிவு நீரால் பாதிப்புதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் நொய்யல் ஆறு பாசனம் பெறும் பகுதிகள் சாயகழிவு நீரால் மாசுபட்டன. இதில் ஒரு சில பகுதிகளில் பட்டா நிலங்களே மாசுபட்டு பயிர் சாகுபடி இல்லாமல் உள்ளன. இதை மேம்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட நிலங்களை சீர்திருத்தி விவசாய பணிக்கு கொண்டுவர திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, ஊத்துக்குளி தாலுகா மொரட்டுப்பாளையம் கிராமம் செம்பாவள்ளம் பகுதியில் தரிசாக கிடக்கும், 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சீரமைக்க வேளாண்மை துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான அந்த நிலத்தில் இருந்த முள் புதர்கள் அகற்றப்பட்டு 10 ஏக்கரிலும் குழிகள் எடுத்து தென்னை நடவுக்கு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தென்னை நடவுஇந்தநிலையில் அந்த நிலத்தில் தென்னை நாற்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தென்னை நடவுக்கு தேவையான 800 நெட்டை தென்னங்கன்றுகள் பவானிசாகர் தென்னை நாற்று பண்ணையில் இருந்து வேளாண்மை துறை மூலம் எடுத்துவரப்பட்டு உரங்களும் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணைஇயக்குனர் சந்தானகிருஷ்ணன் தென்னை நாற்றுகளை நட்டு நடவு பணியை தொடங்கிவைத்தார்.
அப்போது, சாயகழிவு கலந்த நொய்யல் நதிநீர் பாதிப்பினால் தரிசாக கிடக்கும் நிலங்களை சீர்திருத்தம் செய்து தென்னை, ராகி, பருத்தி போன்ற பயிர்களை பயிரிடும் படி பிற விவசாயிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். தென்னை நடவுக்கான ஏற்பாடுகளை ஊத்துக்குளி உதவி வேளாண்மை இயக்குனர் அரசப்பன், வேளாண்மை அலுவலர் செல்லம்மாள், அட்மாதிட்ட மேலாளர் ராதிகா, உதவி வேளாண்மை அலுவலர்கள் பெஞ்சமின்,முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

0 comments: