Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுரத்த வெள்ளத்தில் பிணம் 
திருப்பூர் கூத்தம்பாளையம் ஜே.பி.நகரைச் சேர்ந்தவர் சுந்தரம்(வயது 45). இவர் பாண்டியன் நகரில் கேபிள் ஆபரேட்டராக உள்ளார். இவருடைய மனைவி புஷ்பலதா(38). இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. கோகுல்(18), வசந்த்(16) என்ற இரு மகன்கள் உள்ளனர். கோகுல் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். வசந்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறான்.
நேற்று வழக்கம் போல் சுந்தரம் பாண்டியன் நகருக்கு கேபிள் டி.வி. பணிக்கு சென்று விட்டார். மகன்கள் இருவரும் பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டனர். வீட்டில் புஷ்பலதா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில் மாலை 5¼ மணி அளவில் பள்ளியில் இருந்து வசந்த் வீட்டுக்கு சென்றார். உடன் அவருடைய மாமா ஜெய்கணேசும் சென்றார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது புஷ்பலதா வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
10 பவுன் நகை கொள்ளை 
உடனடியாக இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புஷ்பலதா தலையின் பின்பகுதியில் கொடூரமான ஆயுதத்தால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகப்படியாக வெளியானதில் அவர் இறந்தது தெரியவந்தது.
புஷ்பலதா அணிந்திருந்த தங்க நகை மற்றும் கம்மல் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தாலிக்கொடி கழுத்தில் கிடக்கிறது. அதுபோல் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படவில்லை. புஷ்பலதாவை கொலை செய்து சுமார் 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் தடயம் எதுவும் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவிச் சென்றுள்ளனர். வீட்டுக்குள் தரையில் தண்ணீரையும் ஊற்றிச் சென்றுள்ளனர். இதனால் கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது தெரியவந்து உள்ளது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? இல்லை வேறு எதுவும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

0 comments: