Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை 
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்கேற்ப நிலைய வளாகத்திற்குள் சுமார் 70–க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் நேற்று ரெயில்வே அதிகாரிகளின் உத்தரவு பேரில் ஆட்டோ நிறுத்தம் ரெயில் நிலையத்தின் வெளியே திடீரென்று மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள் ரெயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ரெயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியதாவது:–
திருப்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் சுமார் 70–க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறோம். நேற்று ரெயில்வே அதிகாரிகள் திடீரென்று ரயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்காமல், வெளியே ரோட்டோரத்தில் நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் ரெயில் நிலையத்தின் வெளியே ஆட்டோக்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை. எனவே திருப்பூர் ரெயில் நிலையத்தின் வளாகத்திலேயே ஆட்டோக்களை நிறுத்தி தொழிலை தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் ஆட்டோ ஓட்டுனர்கள் ரெயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு பழைய இடத்தையே எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரி ஆட்டோ ஓட்டுனர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் கலைந்து சென்றனர்.
தகுந்த நடவடிக்கை
இது குறித்து திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரி குயிலன் கூறும்போது:–

ரெயில் நிலைய வளாகத்திற்குள் இருந்து வந்த ஆட்டோ நிறுத்தம், மேல் அதிகாரிகளின் உத்தரவுபடி வளாகத்திற்கு வெளிபுறமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடம் தங்களுக்கு வசதியானதாக இல்லை. இதனால் வளாகத்திற்குள்ளேயே எங்கள் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் ரெயில் நிலைய கோட்ட அதிகாரி திருப்பூர் ரெயில் நிலைய ஆய்வுக்காக இங்கு வர உள்ளார். அப்போது அவரிடம் ஆட்டோ ஓட்டுனர்களின் குறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

0 comments: