Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
தாராபுரத்தில் வங்கியில் போலி நகை கொடுத்து ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

நகைக்கடன் 


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதுபஸ்நிலையம் அருகே நாச்சிமுத்துபுதூரில் வங்கி ஒன்றில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கடத்தூர் முத்துநாயக்கன்பட்டி குருவன்வலசை சேர்ந்த நாராயணசாமியின் மகன் முத்துசாமி (வயது 34) என்பவர் நகைக்கடன் வாங்க வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அலுவலரிடம் தான் கொண்டு வந்த நகையை காட்டி, அதற்கு ஈடுடாக ரூ.4 லட்சம் கடன் வேண்டும் என்று முத்துசாமி கேட்டுள்ளார்.


உடனே வங்கி அலுவலர்கள் முத்துசாமி கொண்டு வந்த நகையை வாங்கி அது அசல் நகைதானா? என பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் கொடுத்த நகை அனைத்தும் 22 காரட் தங்கம் என தெரியவந்தது. மேலும் முத்துசாமி கொண்டு வந்த 186 கிராம் நகையின் எடைக்கு ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் கடன் தர முடியும் என்று வங்கி அலுவலர்கள் கூறினார்கள்.
ரூ.3½ லட்சம் கடன் 
ஆனால் முத்துசாமி ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் 186 கிராம் நகையை முத்துசாமி வங்கி அலுவலரிடம் கொடுத்தார். ஆனால் வங்கி அலுவலர்களோ மீண்டும் அந்த நகையை பரிசோதித்து பார்க்காமல் ரூ. 3 லட்சத்து 42 ஆயிரத்தை முத்துசாமியிடம் கொடுத்தனர். பணத்தை வாங்கிய முத்துசாமி அங்கிருந்து சென்று விட்டார்.
அன்று மாலை வங்கியின் நகை மதிப்பீட்டாளர் வங்கியில் உள்ள நகையை பரிசோதித்து பார்த்தார். அப்போது முத்துசாமி கொடுத்த நகை அனைத்தும் போலி என தெரியவந்தது.
இதையடுத்து வங்கி தலைமை கிளை மேலாளர் ராஜகோபால் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொம்மு, சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் முத்துசாமி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முத்துசாமி இதுபோல் வேறு எங்கும் மோசடி செய்தாரா? வங்கியில் அவர் கொடுத்த முகவரி உண்மையானது தானா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

0 comments: